கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் கிராமப்புற மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், கிராமப்புற மக்களிடையே கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி, கோவை தடாகம் மற்றும் வீரியம்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் கே.எம்.சி.ஹெச். இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு முகாமிட்டு கிராமப்புற மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இந்த முகாம்களில் இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

மேலும் கிராமத்தில் இருந்து சிகிச்சை பெற நகருக்கு வர இயலாத மக்களுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கல்லீரல் பரிசோதனைக் கருவியை மக்கள் பயன்பெறும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கே.எம்.சி.ஹெச். இறக்குமதி செய்துள்ளது.

இதனை தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி, மக்கள் சேவைக்கு ஞாயிற்றுகிழமை துவக்கிவைத்தார். இதில் கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்தனர். கே.எம்.சி.ஹெச். கல்லீரல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் அருள்ராஜ் உடனிருந்தார்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் பேசுகையில், நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராம மக்கள் ஆரோக்கியம் என்பது எனது நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானது. முன்பைவிட தற்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மக்களும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களால் பாதிப்படைகின்றனர் என்பது கவலை அளிக்கும் விஷயம்தான். ஆயினும் நவீன மருத்துவ வசதிகள் நம்பிக்கை அளிப்பதாய் உள்ளன. மக்கள் தொடர்ந்து மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு தங்களது ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும். எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச். கல்லீரல் துறை மருத்துவர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான அளவில் கலந்துகொண்டனர்.