தூயதமிழ் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா

தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சுப்பீரியர் கிங்ஸ் இணைந்து மே 10ம் நாள் முதல் 24ம் நாள் வரை கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பிழையின்றித் தமிழ் பேச, எழுத, படிப்பதற்கான சிறப்புப் பயிற்சியை நடத்தியது.

தூயதமிழ் பயிற்றுநர் தமிழ் மணிகண்டன் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 12 நாள்களும் தமிழை எளிமையாகக் கற்பித்தார். பட்டறையில் மாணவர்களிடையே பேச்சு, பரதம், சிலம்பம் போன்ற கலைகள் அடையாளப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் வகுப்பில் வாசித்தல் திறன், கவனித்தல் திறன், உற்று நோக்கல் திறன் மேம்பாடு, நற்பண்புகளை ஊக்குவித்தல் மற்றும் கையெழுத்துப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வியாழக்கிழமை தூயதமிழ்ப் பயிற்சி பட்டறை நிறைவு விழா, தூயதமிழ் இளைஞர் பாசறையின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழா – நூல் வெளியீடு மற்றும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தூயதமிழ் இளைஞர் பாசறையின் அறிவுரைஞர் இராமாநுசன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

தூயதமிழ் இளைஞர் பாசறையின் புரவலர் வெங்கடகிருட்டிணன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸின் பட்டயச் செயலாளர் அருண்குமார் விழாவிற்கு முன்னிலை உரை வழங்கினர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 12 நாள்கள் கோவையில் நடத்தப்பட்ட கட்டணமில்லாத் தூயதமிழ்ப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நற்சான்றிதழ்களும், புத்தகங்களும் பரிசாக வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவினை தமிழ் மணிகண்டன் ஒருங்கிணைத்திருந்தார்.