கோவையில் பல கண்காட்சி தொடங்கியது பழங்களால் ஆன விலங்குகள் படங்கள்.

கோவை மே 27-

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனையொட்டி ஆண்டுதோறும் நீலகிரியில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பல கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து ரோஜா, வாசனை திரவியம் மற்றும் மலர் கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோடை விழாவின் நிறைவாக இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பழக்கண்காட்சிக்காக தயாரான 2 அரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பழக்கண்காட்சியில் சிறப்பம்சமாக 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டு பிரம்மாண்ட அன்னாசிபழம் வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர திராட்சை பழங்களை கொண்டு மலபார் அணில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பல வகையான பழங்களை கொண்டு பழக்கூடை, ஆரஞ்சு பழங்களை கொண்டு பிரமிடு, மாதுளை பழங்களை கொண்டு மண்புழு உருவம், ஊட்டி 200-யை குறிக்கும் வகையில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு ஊட்டி 200 உருவமும் வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் பழங்களை கொண்டு பொம்மை மற்றும் விலங்கு, பறவைகளின் உருவங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள் பழ கண்காட்சியை பார்வையிட்டு, பழங்களால் ஆன உருவங்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

கண்காட்சியில் கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் சார்பில் 25 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள அரங்குகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக குன்னூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.