கோவையில் பெண் போலீசாருக்கு மாரத்தான் போட்டி.. டி.ஜி.பி துவக்கி வைத்தார்

பெண்கள் இணைந்து 50 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக கோவையில் பெண் போலீசாருக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பெண் துணை ஆணையர் முதல் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் வரை கலந்து கொண்டனர்.

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் போலீசாருக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதனை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் காவல்துறையில் பணியாற்றி வரும் கடை நிலை பெண் காவலர்கள் துவங்கி, துணை ஆணையர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி வரை கலந்து கொண்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் துவங்கிய இந்த மாரத்தான், ரேஸ்கோர்ஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்து ஆயுதப் படை மைதானத்தில் முடிவடைந்தது. 5 கிமீ தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் சுகாசினி, மாநகரத் துணை காவல் ஆணையர் சந்திஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் கலவரக்காரர்களை பெண் போலீசார் கட்டுப்படுத்தும் மாதிரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண் போலீசார் கலவர காரர்கள் போல் நடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைப்பது போன்ற ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.