காதலன் கட்டிய தாலியை கழட்டி வீசிவிட்டு பெற்றோருடன் சென்ற இளம் பெண்.

கோவை மே 23-

திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர். அப்போது அவரிடம், உன்னை

எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.

முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது. அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம். ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.