கோவையின் இதயத் துடிப்பு… கே.ஜி. மருத்துவமனை!

இருதயம், மூளை – எது முக்கியம்? ஏன் முக்கியம்? இருதயம் காக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கின்றனர் கே.ஜி மருத்துவமனையின் இருதயநோய் சிகிச்சை நிபுணர்கள்.

கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்கள் கூறியதாவது,

‘மூளை இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். இருதயம் இருந்தால் மக்களுக்கு சிறந்த சேவை செய்யலாம். ஆட்சியராக உயர, கல்வி கற்க மூளை அவசியம். மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியாக, நல்ல இதயம் வேண்டும். ஒரு தாய்க்கு நல்ல இதயமும் உண்டு, நல்ல மூளையும் உண்டு. அதனால்தான் தாய் என்பவள், கருணை உள்ளம் கொண்ட நடமாடும் தெய்வம் என்கின்றனர்.

மூளை என்பது ஒரு சிறந்த, அற்புதமான கருவி. தற்போதைய கண்டுபிடிப்பான ChatGPT போல, கேட்பதற்கு எல்லாம் உடனுக்குடன் பதில் சொல்லும். ஆனால், ஒரு நிமிடத்திற்கு 72 தடவை, ஒரு நாளைக்கு 15,000 முறை எனத் துடித்துக்கொண்டே இருக்கும் இருதயம், சக்தியின் அம்சம். அந்த சக்தி குறைந்துவிட்டால், இருதய செயலிழப்பு (Congestive Heart Failure). இதனால், இதயம் விரிந்து சுருங்குவதற்கு இயலாமல் மெதுவாக சிரமப்பட்டுத் துடிக்கும்; மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்; நடக்கவோ, ஓடவோ இயலாது; இருதயத் தசைகளின் வலு குறைந்துபோகும்; 60 இருக்க வேண்டிய துடிப்பு, 20தான் இருக்கும்.

இதேபோன்று, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துவிட்டால், அதற்குப் பெயர், இருதய அடைப்பு (Heart Attack) ஆகும். அடுத்து, இருதய முடக்கம் (Heart Block). இதில் இருதயத்தின் மூன்று வால்வுகளிலும் அடைப்பு அல்லது இருதயத்தின் நரம்புகள் சரியாக வேலை செய்யவில்லையெனில் இந்நிலை ஏற்படும்.

ஆக, நாம் நலமாக வாழ்வதற்கு வலுவான இருதயமே முக்கியமானது. இதற்கு ஆரோக்கியமான உடல்நிலை அவசியம். ஆரோக்கியம் இருந்தால்தான் ஆன்மிக வழியாகட்டும், இல்லற வாழ்வாகட்டும், விளையாட்டு, வேலை, பொழுதுபோக்கு என வாழ்வை அனுபவித்துச் செல்ல முடியும். ஒரு மனிதனுக்கு இரு கண்கள், ஒரு கை ஒரு சிறுநீரகம் இல்லை என்றாலும் வாழலாம். ஆனால் வலுவிழந்த இருதயம், ஒருவரது வாழ்விற்கு துணை நிற்காது.

இந்த உடல் வாழ, நல்ல ஆகாரம் தேவை. அந்த ஆகாரத்திற்கான வழிதான், வேலை. ஆனால் தற்போதைய மனிதன், நாகரிகம் என்ற பெயரில் வீட்டில் உண்பதில்லை, துரித உணவு, கொழுப்பு மிகுந்த மாமிச உணவு உண்கிறான், மேலும் உடற்பயிற்சி இல்லாமை, வேலையே செய்யாமல், சிறிது தூரம்கூட நடக்காமல் ஏற்படும் தொந்தி, மது, புகை உள்ளிட்ட போதைக்கு ஆளாகுதல் எனத் தவறான பாதையில் செல்கிறான். இதனால் இருதயம் பலவீனமாகிறது. எப்படியெனில், இந்த நாகரிக பழக்கங்களால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் தொடர்ந்து கொழுப்புப் படிந்து, இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இருதயம் என்பது ஒரு தசைப்பகுதி. இந்த தசைப்பகுதிக்கு உணவுதான் இரத்தம். அந்த இரத்தம் கிடைக்காமல் இருதயம் பசிக்கு அழும். அந்த அழுகைதான், நெஞ்சு வலி. இந்த வலிதான் இருதய செயலிழப்பாகி, மனிதனைப் பிணமாக்கும். இது திடீரென நிகழும். நல்லாத்தானே இருந்தார் என்று சடலத்தின் முன்பு பிறரைப் பேச வைக்கும் இந்த நிகழ்வுதான், ஹார்ட் அட்டாக்.

இன்றைய காலகட்டத்தில் 20 வயது முதல் 90 வயது உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருகிறது. அன்றைக்கு 40, 60 வயதில் வந்த இந்நோய், இப்போது மாறுபட்ட வாழ்க்கை முறையால் முன்னேறியுள்ளது. இந்நோய்க்கு ஆண், பெண் பேதமில்லை. மாதவிடாய் முடிந்த பெண்கள், ஆண்களுக்கு சமமாக இந்நோய்க்கு ஆளாகிறார்கள். நல்ல பழக்கங்கள் இல்லாதோருக்கும், பெற்றோர் மூலம் இருதய நோய் வரம் வாங்கியோருக்கும், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளோருக்கும், அதிக கோபம், மன அழுத்தம் உள்ளோருக்கும் இருதய செயலிழப்பு கண்டிப்பாக திடீரென வரும். அப்படி வந்துவிட்டால், வாழ்க்கை என்பது வீட்டோடுதான்.

இதில், அமைதியான மாரடைப்பு (Silent Heart Attack) அபாயமானது. நெஞ்சு வலி என்பது இயற்கை நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கை மணி. ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வலி இல்லாமல் ஹார்ட் அட்டாக் ஏற்படும். வலியின்றி, உடலில் வியர்வை மட்டும்தான் வரும். ஈசிஜி எடுத்துப்பார்த்தால்தான் ஹார்ட் அட்டாக் வந்ததே தெரியும். நெஞ்சு வலி, வாயுத் தொல்லை வந்தால், தாடையில், இடது கைக்கு, முதுகுக்கு வலி வந்தால், மூச்சிரைப்பு, கழுத்துக்குக் கீழ் எங்கே வலி வந்தாலும் ‘ஹார்ட் அட்டாக்’. உடனே நல்ல மருத்துவமனையில் சிறந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும்.

இந்த நோயைத் தவிர்க்க, வருமுன் காப்பதற்கு ஒரே வழி, முழு உடல் பரிசோதனை. இதன்மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகமும் பரிசோதிக்கப்பட்டு, உடலில் மறைந்திருக்கும் குறைகளைத் தெளிந்து அவற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் காரில் வெகுதூரம் ஒரு சுற்றுலா செல்லும் முன்னர், சிறந்த மெக்கானிக்கிடம் காரைக் கொடுத்து முழுவதுமாக பரிசோதித்துவிட்டுத்தான் பயணிப்பீர்கள். அதேபோல், உங்களது ஆயுள் இருக்கும்வரை அந்த உடலை இயக்கும் இருதயம் எனும் இன்ஜின் பழுதில்லாமல் இருக்க பரிசோதனை என்பது மிகமிக அவசியம்.

உங்கள் குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் இதனை நீங்கள் கண்டிப்பாக, 25 வயதில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் செய்துகொள்ளலாம். தவறில்லை. ஏனெனில், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே, நெஞ்சு வலியா, நினைவில் வையுங்கள் 108 அல்லது உங்கள் உயிர் காக்கும் உன்னத சேவை செய்ய 24 மணிநேரமும் காத்திருக்கும் கே.ஜி. மருத்துவமனையை அழையுங்கள்

0422 2222222. முழுவதும் நவீனக் கருவிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி, அனுபவமுள்ள, திறமைவாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களுடன் தயாராக இருக்கிறது.

ஆம்புலன்ஸில் உங்கள் வீட்டிற்கு வரும் எங்கள் மருத்துவ உதவியாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் செந்தில்குமார், நோய்க்குத் தகுந்த முதலுதவிகள் செய்து, தேவைப்பட்டால் வீட்டிலேயே ஈசிஜி எடுத்து, டிரிப்ஸ் போடுவது, லோடிங் டோஸ் எனும் மூன்று முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் (டிஸ்பிரின் 350 மி.கி. – 1, அடார்வாஸ் டாடின் 80 மி.கி. – 1, குலோபிடாப் 150 மி.கி X2 – 2) கொடுத்து, உடனடி ஆரம்ப முதலுதவி சிகிச்சையை அளித்து, உங்களுக்கு கோல்டன் ஹவர்ஸ் எனும் 2 மணிநேரத் தாங்கும் சக்தியைக் கொடுத்து, பாதுகாப்பாக கே.ஜி. மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள்.

அதேவேளையில் மருத்துவமனையில் தயாராக இருக்கும் இருதய நோய் சிறப்பு மருத்துவர்கள் நித்தியன், ராவ், ரஞ்சித், சரவணன், பாலசுப்ரமணியம் ஆகியோரும், துணை இருதய நோய் மருத்துவர்கள் எட்டு பேரும் உங்கள் இருதயத்தைப் பாதுகாக்க விரைவாக உழைப்பார்கள்.

பணம் இல்லை என்பது முக்கியமில்லை, உங்கள் உயிர் காக்கும் சேவை எங்களுடையது. கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் 40 படுக்கைகள் உள்ளன. 30 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

128 ஸ்லைஸ் CT ஸ்கேன் வசதி உள்ளது. இங்கே எந்தப் பயமும் இல்லாமல் வாருங்கள், உங்கள் ஓரிதயம் காத்து, இருக்கும் ஒரு வாழ்வை முழுமையாக்கித்தர எங்கள் மருத்துவப் படை முழுவீச்சுடன் தயாராக உள்ளது என்றார்.

நிம்மதியாக உறங்குங்கள்… நோயை விரட்டுங்கள்!

Dr.Y.Y.ராவ், இருதய சிகிச்சை மருத்துவர்

‘இளம்தலைமுறையினர் மன அழுத்தம், மாரடைப்பு மற்றும் இவற்றை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுப்பது குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் பலரும் மன அழுத்தம் மிகுந்த பணியில் இருக்கிறார்கள். இதனால் தங்கள் இருதயத்தைப் பராமரிக்க மறந்துவிடுகிறார்கள்.

வாழ்வில் சாதனை படைப்பது, பணம் சம்பாதிப்பது ஒருபுறம் இருந்தாலும், நமது இருதயத்தை முறையாகப் பராமரிப்பது எப்படி என அறிந்திருப்பது மிக மிக அவசியம். ஒரு நாளில் 23 மணி நேரம் மற்றவர்களுக்காக வாழ்ந்தாலும், குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்களுக்காக, உங்கள் இருதயத்திற்காக வாழ வேண்டும். அந்த ஒரு மணி நேரத்தில் எதுவும் செய்யாமல் மனதை அமைதி நிலையில் வைக்க வேண்டும். யோகா, உடற்பயிற்சி செய்யலாம். ஒரு நாளில் அரைமணிநேரம் பேசாமல், சிந்திக்காமல் அமைதியாக இருக்க வேண்டும்.

உங்களைப்பற்றி சிந்தித்து, அன்றைய நாளைக் குறித்து சிந்தித்து, மாற்ற வேண்டியது என்ன என்று யோசித்தால் உங்களுக்கும், சமூகத்திற்கும் நல்லது. விடுமுறைக்காக வெளியே செல்ல நினைத்தால், இங்கே செல்ல வேண்டும். இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற நிறைய திட்டங்களை யோசிக்க வேண்டாம். சென்ற இடத்தில், ஒரு அறையில் அல்லது பொது இடத்தில் அமர்ந்து அங்குள்ள சுற்றுப்புறத்தைக் காணுங்கள், மனதை லேசாக்குங்கள், இவ்வாறு அந்த இயற்கைச் சூழலை அனுபவித்தாலே போதுமானது.

முழு உடல் பரிசோதனையில் சர்க்கரை, இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. ஆனால் சில மாதங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. TMT பரிசோதனை 100 சதம் சரியான முடிவைத் தெரியப்படுத்த வாய்ப்பில்லை. 40  முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் குரோனரி கிளாசிபிகேஷன் என்ற மிகவும் எளிய, அதிக செலவில்லாத பரிசோதனையின் மூலம் இருதயத்தில் அடைப்பு இருக்கிறதா என்பதை நம்பகமாகத் தெரிந்துகொள்ளலாம். பல மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனையை செய்ய முடியும். ரேடியேசன் கிடையாது. சிடி ஸ்கேன் மூலம் இருதயத்தைச் சுற்றியுள்ள தமனிகளில் (Coronary arteries) ஏதாவது அடைப்புகள் உள்ளதா என்பதை புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த அடைப்புகள் சிறியதா, பெரியதா எனவும் அதன்மூலம் 75 சதவீதம் பேருக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா எனத் தெளிவாக அறிந்துகொள்ளலாம். மேலும் இருதயத்தில் இனிமேல் வரக்கூடிய அடைப்புகள் குறித்தும் அறியலாம்.

தூக்கமின்மை மாரடைப்பு, சர்க்கரை நோய், வலிப்பு, நோய் தொற்றுகள் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சரியான தூக்கம் இல்லையென்றால் அடுத்தநாள் காலையில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும், இதயத்துடிப்பு அதிகரிக்கும், தமனிகள் சேதமடையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்குங்கள். நோயை விரட்டுங்கள். நாளைய பொழுது நல்லதாக இருக்கும்’ என்றார்.

வள்ளுவம் கூறும் மருத்துவம்!

Dr பாலசுப்ரமணியம், இருதய சிகிச்சை நிபுணர்

“உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்” என்ற குறளின் மூலம் மருத்துவர், நோயாளி, மருந்து, மருந்து கொடுப்பவர் குறித்தும்,  நோயின் தன்மை, நோயின் கால அளவும், நோய் வருமுன் காப்பது குறித்தும் திருவள்ளுவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். சூரிய உதயத்திற்கு முன் எழுந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்கிறார் ஔவையார்.

ஒருவரது வாழ்க்கை முறை மாற்றம் என்பது, காலை முதல் மாலை வரையான நடவடிக்கைகளைக் குறிக்கும். இதில் உணவு, உணர்வு என அனைத்தும் அடக்கம். மருந்து உண்ணாமல் வாழ்வதற்கும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் எனும் குறளில் வழிவகை சொல்கிறார் வள்ளுவர். உண்ணும் உணவு அளவு அறிந்து உண்டால், மருந்து சாப்பிட வேண்டாம், நீண்ட நாள் வாழலாம் என்கிறார். பெரிய மருத்துவக் கல்வி சொல்லாததை அன்றே வள்ளுவர் கூறிவிட்டார். நீங்கள் அவர் சொல்படி வாழ்ந்தால் மட்டும் போதும்.

நெஞ்சு வலியை, பலரும் வாயுத்தொல்லை என்று நினைத்து விடுகிறார்கள். நடந்தால், சற்று நெஞ்சு வலிப்பதாக, பாரமாக இருப்பதாக உணர்ந்தால் அது100 சதவீதம் உறுதியாக மாரடைப்பு அறிகுறி. குளித்துவிட்டு வந்தால் நெஞ்சில் ஒரு இறுக்கம், குளிக்கும்போது மூச்சுவாங்குதலும் மாரடைப்பின் அறிகுறிதான். எனவே, உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது 25 முதல் 30 வயதிலேயே மாரடைப்பு வருவதற்கு காரணம், வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்களே. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணம், புகைப்பிடித்தல். பெண்களுக்கு ஹார்மோன் பாதுகாப்பு என்று சொல்லும் மாதவிடாய் நின்ற 4 முதல் 5 ஆண்டுகளில், சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் இருந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு வரும் இருதயநோய் அறிகுறிகள் வித்தியாசமானதாக (Atypical Presentations) இருக்கும். நெஞ்சுவலி வராது, ஆனால் நடந்தால் சோர்வு, தளர்வு, கை, கால் அசரிக்கை என சொல்வார்கள். அவர்களுக்கு 10 ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் நிச்சயமாக இருதய பரிசோதனை செய்ய வேண்டும். முடிந்த அளவு முழு உடல் பரிசோதனை அல்லது டிரெட்மில் செய்ய முடியவில்லை எனில் ஆஞ்சியோகிராம் செய்வது நல்லது.

துபாயைச் சேர்ந்த 45 வயது நபர் நமது மருத்துவமனைக்கு வந்தபோது இருதயத்துடிப்பு மிகவும் குறைந்து இருந்தது. இதனால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, ஹார்ட் பிளாக் ஏற்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தை நெருங்கும் நிலையில், உடனடியாக தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அவருக்கு பேஸ்மேக்கர் போட்டு, ஆஞ்சியோகிராம் செய்து உயிர் காப்பாற்றினோம். தாமதம் இல்லாமல் எடுத்த அதிரடி முடிவு, சிறந்த கருவிகள், நவீன வசதிகள் அவரது உயிரைக் காப்பாற்றியது. இப்படியொரு அற்புதமான மருத்துவமனையைக் கட்டி, அதிக அளவிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, மக்களுக்கு துரித சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைத் தலைவருக்கு மக்கள் சார்பாக எனது நன்றிகள்’ என்றார்.

மன அழுத்தத்தைக் கையாளும் வழி!

Dr நித்தியன், இருதய சிகிச்சை நிபுணர்

‘தென்னிந்திய மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு முக்கியமான தகவல். மரபுவழி நோய்கள், சர்க்கரை, கொழுப்பு என நமக்கு முன் நிற்கும் காரணிகள் அதிகம். புகைப்பிடிப்பது, மாரடைப்பிற்கும், உடலில் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் கட்டிகள் ஏற்படவும் காரணமாக உள்ளது.  இளைஞர்கள், புகைப்பிடிப்பதைத் தவிர்த்து, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் இதுபோன்ற நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், உடலுக்கு நன்மை தரும் Endocrine சுரப்பி அதிகம் சுரந்து நோய் பாதிப்புகள் தடுக்கப்படும்.

அடுத்து, மன அழுத்தத்தால் ஒரே எண்ணம் மீண்டும் மீண்டும் மூளையில் தோன்றி, தூங்கவிடாமல் செய்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கும். இதனால் இரத்தக்கொதிப்பு, கொழுப்பு, சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே மன அழுத்தத்தை சரியாகக் கையாள வேண்டும்..

எனது அனுபவத்தில் இதற்கான ஒரு வழி கூறுகிறேன். நம்மைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு, அதற்குள் எதையும் உள்ளே வரவிடக் கூடாது. அதாவது, அலுவலகப் பணிகளை, பிரச்னைகளை வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாது, வீட்டுப் பிரச்னைகளை வேலைக்குள் கொண்டு செல்லக்கூடாது. இதனால் இரு தரப்பிலும் இருந்துவரும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் கோபப்படக் கூடாது. குறிப்பாக, மனதிற்குள் எதையும் கொண்டு செல்லக் கூடாது.

உடல் உழைப்பு அதிகமெனில், 8 முதல் 10 மணி நேரமும், உடல் உழைப்பு இல்லாத நிலையில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமும் நிம்மதியான தூக்கம் அவசியம். இதனால் உடல் புத்துணர்ச்சியாகும், மன அழுத்தம் குறையும்.

கலப்படமில்லாத உணவு, வீட்டு உணவு சாப்பிட வேண்டும். பெரும்பாலும் ஹோட்டல் உணவு தவிர்க்க வேண்டும். கலப்பட உணவுகளை சாப்பிடுவதால் உடல் அசாதாரணமாக செயலாற்றி, Gastritis, Acidity ஏற்படுகிறது. அத்துடன், அளவாக சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குத் தகுந்த வேலையையும் செய்ய வேண்டும். இல்லையெனில், மைக்ரோகிராம் அளவிற்கு செல்களில் கொழுப்புப் படிந்து, ஒரு கட்டத்தில் அது அடைப்பாக மாறும்.

தேவையான அளவு மட்டுமே மாவுச்சத்தை எடுத்துக்கொண்டால் கொழுப்பு சார்ந்த பிரச்னையைக் குறைக்கலாம். தினமும் சாப்பிடும் உணவில் 10 % Fat இருக்கலாம். சமையல் எண்ணெயைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. வழுவழுப்பான மற்றும் மெலிதான என எண்ணெய் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.  செக்கு எண்ணெய் நல்லதுதான். ஏனெனில் எண்ணெயை சூடாக்கும் வகையில்தான் அதன் தரம் மாறுபடுகிறது. அடுத்து, (MUFA), (PUFA) ஆகிய இவ்விரண்டும் உள்ள சமையல் எண்ணெய் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதிலும், MUFA 30 சதவீதம் உள்ள எண்ணெய் உபயோகிப்பது இருதயத்திற்கு ஆரோக்கியமானது.

அரிசி அதிகம் உட்கொள்ளும் தென்னிந்தியர்களான நமது இளம்பருவத்தினருக்கு 30 முதல் 40 சதவீதம் சர்க்கரை நோய் இருக்கிறது. எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதும். பயப்பட வேண்டாம்’ என்றார்.

நேரம்தான் இருதயம்!

Dr சரவணன், இருதய சிகிச்சை நிபுணர்

‘இருதயம் மற்றும் இரத்தக்குழாய் (Cardiovascular disease) நோய் என்பதில், மாரடைப்பு (Heart Attack), இதய செயலிழப்பு (Heart Failure), பக்கவாதம் (Stroke) ஆகிய மூன்று நோய்கள் அடங்கும். ஒவ்வொரு வருடமும் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் இந்த நோய்களால் உயிரிழக்கின்றனர். அதனால் இது உலகின் முதன்மையான உயிர்க்கொல்லி நோய்கள்.

இது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில், முதலாவது இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு. இருதயத்திற்கு மூன்று முக்கிய குழாய்கள் இரத்தத்தைக் கொடுக்கின்றன. இந்த இரத்தக்குழாய் நோய்களை Coronary Artery Disease என்கிறோம். இருதயத்தின் நான்கு அறைகளில், மேல் இருக்கும் இரண்டு அறைகள் Atrium எனப்படும், கீழே இருக்கும் அறைகளை Ventricle எனப்படும். இதற்கு நடுவே கதவுபோல நான்கு வால்வுகள் செயல்படுகின்றன. இந்த வால்வுகளில் பிரச்னை ஏற்படலாம் (Valvular Heart disease). இது இரண்டாவது வகை. மூன்றாவது, இருதயம் என்கிற தசையில் ஏற்படும் பிரச்னைகள் (Cardiomyopathy) ஆகும்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் கையில் சிறிதாக ஒரு ஊசி போட்டு, இருதயத்தில் அடைப்பு உள்ளதா, மூன்று இரத்தக்குழாய்களில் எத்தனை அடைப்புகள் உள்ளது, எத்தனை சதவீத அடைப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

அடைப்புகளின் தீவிரத்தைப் பொருத்து மருந்து மாத்திரையா அல்லது ஸ்டண்ட் வைக்க வேண்டுமா அல்லது பைபாஸ் சிகிச்சையா என முடிவு எடுக்கப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி என்பது ஒரு சிகிச்சை. கை அல்லது கால் வழியாக குழாய்களின் மூலம் ஒரு வயரை செலுத்தி, அதில் பலூன்களைக் கொண்டு அடைப்பு இருக்கும் இடத்தில் வைத்து உடைத்து விடுவது. சிலருக்கு இதுமட்டுமே போதும். 70 முதல் 80 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருப்பவர்களுக்கு ஸ்டண்ட் எனப்படும் ஸ்பிரிங் வைப்போம்.

உடனடி உயிரிழப்பு ஏற்படுத்துவது மாரடைப்பு. எனவே மாரடைப்பு ஏற்பட்டதும் லோடிங்டோஸ் மாத்திரைகளை உட்கொண்டு, உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். நேரம்தான் இருதயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பயிருக்குத் தண்ணீர் குறைவாகச் செல்லும்போது, அந்தப்பயிர் கருகுவதற்கு முன்பு தண்ணீர் திறந்துவிடுவதுபோல, Golden Hour எனும் நெஞ்சு வலி வந்த மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அடைப்பைக் கரைக்கும் மருந்தை ஊசி மூலமாக உடனடியாக எடுத்துக் கொண்டாலோ அல்லது பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு அடைப்பை எடுத்துவிட்டால் இருதய தசைகளைக் காப்பற்றலாம்.  உயிரையும் காப்பாற்றலாம்‘ என்றார்.

தாமதம் கூடாது!

Dr ரஞ்சித், இருதய சிகிச்சை நிபுணர்

‘இருதயத்தில் வரக்கூடிய நோய்கள் என்பது மாரடைப்பு, இருதயத் துடிப்பில் மாறுதல்கள், வால்வுகளில் பிரச்னை, குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை உள்ளிட்டவையாகும். நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். வாயுத் தொல்லை, அசிடிட்டி என நீங்களே முடிவு செய்து வீட்டிலே இருந்து நீங்களே தேவையில்லாத மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. 40 வயதிற்கு மேல் அல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடல் வியர்த்தல், முதுகு வலி, இடது கை வலி ஏற்பட்டால் உடனடியாக இசிஜி எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையின்றி அலட்சியமாக நேரத்தை வீணடிக்கக் கூடாது.

அடுத்து, தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதால் அவர் மூலமாகத் தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு ஹார்ட் அரஸ்ட், இருதயத் துடிப்பு நின்றுபோதல், ஹார்ட் பிபி குறைதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். தாமதத்தால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு ஹார்ட் பம்ப்பிங் மிகவும் பலவீனமாகும். தாமதப்படுத்தி 12 மணி நேரம் கழித்து என்னதான் சிறப்பான மருத்துவம் செய்தாலும், ஒருசில மாதங்கள் கழித்து அவரால் இயல்பான பணிகளை செய்ய இயலாது. ஏனெனில், ஹார்ட் அட்டாக் வந்த உடனே நீங்கள் தேவையின்றி ஏற்படுத்தும் தாமதம், இருதயத்தின் துடிப்பை எப்போதும் பலவீனப்படுத்தித்தான் வைத்திருக்கும். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டால் மீண்டும் இருதயம் செயலிழக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, தொடர் சிகிச்சை, அக்கறை எப்போதும் அவசியம்.

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க, உடற்பயிற்சி, உடல் உழைப்பு மிக அவசியம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சொகுசு வாழ்க்கையை விரும்புகின்றனர். உடலுக்கு எந்தவிதமான வேலையையும் கொடுப்பதில்லை. எனவே, தினமும் அரைமணி நேரம் நடக்க வேண்டும், விளையாட வேண்டும், எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை விட்டுவிடுவது அவசியம். ஏனெனில், இளம் வயதிலேயே மாரடைப்பு கொடுப்பதில் புகை முக்கியப்பங்கு வகிக்கிறது. பரம்பரை நோய்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 30, 40 வயதிற்குமேல் மருத்துவப் பரிசோதனைகள் செய்து, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு இருதயத் துடிப்பு மிகவும் குறையும். அவர்களுக்கு மயக்கம், கண் இருட்டடிப்பு அறிகுறிகள் தோன்றி, முழுவதும் துடிப்பு குறைந்து மருத்துவமனைக்கு வந்தால் நோயாளிக்குப் பொருத்தமான பேஸ்மேக்கர் சிகிச்சை அளித்து அவரது உயிர் காப்பாற்றப்படும். இருதயத்துடிப்பும் சீராகும்.

எல்லோரும் ரூ.5 இலட்சத்திற்கு காப்பீடு எடுக்காள்ள வேண்டும். அது தகுந்த நேரத்தில் உங்களுக்கு கைகொடுக்கும்’ என்றார்.

ஆம்புலன்ஸில் வரவேண்டியதன் அவசியம்!

கிருஷ்ணகுமார், கிளினிக்கல் மேனேஜர்

‘வீடு, அலுவலகம் என ஏதோ ஒரு இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் உங்களில் ஒருவரை ஆம்புலன்ஸில் அழைத்துக்கொண்டு, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பாதுகாப்பாக சேர்ப்பதும், நோயாளிக்கு என்னவிதமான சிகிச்சை அளிப்பது, எந்த சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது என அவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதுவரை பார்த்துக்கொள்வதுதான் எனது முக்கியமான பணி.

ஒருவருக்கு நெஞ்சுவலி, உடல் முழுக்க வியர்ப்பது போன்ற தொந்தரவுகள் வரும்போது, உடனடியாக அவருக்கு ஓய்வுகொடுப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் உதவி. நடப்பது, ஓடுவது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. அமைதியாக அவரை ஓரிடத்தில் உட்கார வைக்க வேண்டும். இரண்டாவது, உடனடியாக ஆம்புலன்ஸை அழைப்பது.

மற்றொரு முக்கிய அனுபவக் குறிப்பு, நெஞ்சு வலி ஏற்பட்டவருக்கு கழிவறை செல்ல வேண்டும் என்று தோன்றினால், அவரிடம் கழிவறையின் உள்தாழ்ப்பாளைப் போட வேண்டாம் என எச்சரிக்க வேண்டும். ஏனெனில், உள்ளே அவர் மயங்கி விழுந்தால் கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முனையும்போது, தேவையின்றி அவரின் உயிரைக் காப்பாற்றும் பொன்னான நேரம் வீணாகும். அடுத்து, சிஙிஸி எனும் முதலுதவி குறித்து தெரிந்தால் அதனை செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸில் வரும் நாங்கள், உடனடியாக ஹார்ட் அட்டாக் வந்தவருக்குத் தேவைப்பட்டால் இசிஜி எடுப்பது, மருந்து கொடுப்பது, ஆக்ஸிஜன் கொடுப்பது என உயிர் காக்கும் முதலுதவிகள் செய்வோம். பின்னர், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்குத் தெரிவித்துவிடுவோம்.

உடனே அங்கு அவருக்குத் தேவையான அவசர சிகிச்சைப் பணிகள் துவங்கிவிடுவதால், நோயாளி மருத்துவமனை வந்தவுடன் உரிய சிகிச்சைகள் உடனே ஆரம்பிக்கும். இதன்மூலம் தேவையற்ற ஆபத்தான சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டு, அவரது உயிர் காப்பாற்றப்படும். வரும் வழியிலேயே ஒருவேளை இருதயம் நின்றுவிட்டால் ஷாக் கொடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளும் ஆம்புலன்ஸில் வரும் மருத்துவ உதவியாளர்கள் மூலம் செய்யப்பட்டு, அசம்பாவித சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடுவார்கள். இதுதான் நீங்கள் ஆம்புலன்ஸில் வரவேண்டியதன் அவசியம்.

மேலும், நாங்கள் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு கிட்டத்தட்ட 35 வகை முதலுதவிக்கான சிஙிஸி வகுப்புகள் நடத்துகிறோம். நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த வகுப்புகளை நடத்தித் தருகிறோம். எங்கள் மருத்துவமனையிலும் இந்த வகுப்புகளை நடத்தி சான்றிதழ் தருகிறோம்’ என்றார்.

மாரடைப்புக்கான முதலுதவி

சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டோர், 80 கிலோவிற்கு மேல் உடல் பருமன் உள்ளவர்கள், இரத்தத்தில் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்து அதிகமுள்ள குடும்பத்தினர், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக மனச்சுமையோடு வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள், உயிர் காக்கும் லோடிங் டோஸ் மருந்துகளை ஒரு கவரில் போட்டு எப்போதும் மேல் சட்டை பையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு மாரடைப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

உயிர்காக்கும் மருந்தில் (லோடிங் டோஸ்) உள்ள மருந்துகள்

1.டிஸ்பிரின்           350மிகி     1

2.அடார்வாஸ் டாடின்  80மிகி      1

3.குலோபிடாப்        150மிகிX2         2

மேற்கண்ட இந்த மருந்துகளை ஒரு கவரில் போட்டு எப்போதும் உங்கள் மேல் சட்டை பையில் வைத்திருக்க வேண்டும்.

மாரடைப்பைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்:

நெஞ்சுப் பகுதியில் அசௌகர்யமான உணர்வு, நெஞ்சு எரிச்சல், நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான நெஞ்சு வலி; தாடை மற்றும் கழுத்துவலி; முதுகுப் பகுதி மற்றும் இடது கைக்கு வலி பரவுதல்; அசாதாரணமான உடல் அசதி, அஜீரணம், வாந்தி; குளிர்ந்த இடத்திலும் வியர்வை, பிசுபிசுப்பு; நடப்பதற்கு, மாடிப்படி ஏறுவதற்கு சிரமம்; மூச்சு விடுவதில் சிரமம், தலைச்சுற்றல் மயக்கம், படபடப்பு போன்றவை. இதற்கு உடனடியாக நேரம் தாழ்த்தாமல் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நடக்கவோ, வண்டி ஓட்டவோ கூடாது.

மேலும், உயிர் காக்கும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் இரத்தத்தின் அடர்த்தியை உடனே குறைத்து, மாரடைப்பின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். உங்கள் உயிர்காக்க உதவும். டிங் டோஸ் மருந்துகள் கே.ஜி. மருந்தகத்தில் தனியான ஒரு கவரில் கிடைக்கிறது.