மாங்கரை வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிதான வெள்ளை நிற நாகபாம்பு

மிகவும் அரிதாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு கோவை மாநகர் பகுதியில் பிடிக்கப்பட்டு மாங்கரை வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில், வனத்துறையினர் அது மரபணு பிரச்சனை தோல் நிறமி என்ற குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நிற நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.