குழந்தையின் இரைப்பையில் மேக்னெட் பால்ஸ்: அறுவைசிகிச்சை மூலம் அகற்றி பி.எஸ்.ஜி. மருத்துவமனை சாதனை

பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு, நான்கு வயதான பெண் குழந்தை மூன்று நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த புதன்கிழமை அழைத்து வரப்பட்டது. ஆய்வு செய்ததில், அக்குழந்தையின் இரைப்பையில் நிறைய மேக்னெட் பால்ஸ் (Magnet balls) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக ஒட்டி பெரிய பந்துபோல மாறி இருந்தது. இதையடுத்து மருத்துவர்கள், முதலில் எண்டோஸ்கோபி (Endoscopy) முறையில் உணவுக்குழாய் வழியாக அறுவை சிகிச்சையின்றி அவற்றை அகற்ற முயற்சித்தனர். ஆனால் இறுக்கமாக ஒட்டியிருந்த அந்த மேக்னெட் பால்ஸ்களைப் பிரிக்க முடியாததால், அறுவைசிகிச்சை மூலமே அவை அகற்றப்பட்டன. குழந்தை இப்பொழுது நலமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாவை அருணாச்சலம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செய்தனர்.

மேக்னெட் பால்ஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களை விழுங்கும் சம்பவங்கள் தற்போது அதிகளவில் நடந்து வருகிறது. மூன்று வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு சிறிய அளவிலான விழுங்கக்கூடிய பொருட்களைத் தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். மேக்னெட் பால்ஸ் மிகவும் சிறிதாகவும் பல வண்ணங்களிளும் வருவதால் நான்கு முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கும் இது ஆபத்தாகும்.

இந்த காந்தப் பொருட்கள் இரைப்பை அல்லது குடலில் ஓட்டை போடும் அபாயமும், இதனால் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் விளையாட்டுப் பொருட்களில் உள்ள பேட்டரியையும் குழந்தைகள் விழுங்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விளையாட்டுப் பொருட்களை பெற்றோர் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.