தன்னம்பிக்கை கொண்டவர்களே தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்வர் சச்சிதானந்த பள்ளியில் கவிதாசன் பேச்சு

நமக்குப் புத்தகங்கள் தான் நல்ல நண்பன். தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களைப் படிக்க வேண்டும். என சச்சிதானந்த பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மாணவர்களிடம் பேசினார்.

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியின் முதல்வரும் செயலாளருமான சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “பள்ளிப் பருவத்தில் நீங்கள் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், மேற்படிப்பு படிப்பது மிகவும் எளிதாக அமையும். ஒரு புத்தகத்தைத் தொடக்கம் முதல் இறுதிவரைப் படித்து முடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இடைவிடாது படித்தால்தான் கருத்து வளம் பெருகும். இளமையில் நீங்கள் கற்றுக்கொள்கின்ற நல்ல பழக்கங்கள் வருங்காலத்தில் உங்களைச் சிறப்பாக வாழ வைக்கும்” என பேசினார்.

பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமையுரையில், “நம் நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்குச் சமம். ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமம்’ என்று கூறியுள்ளார். நமக்குப் புத்தகங்கள் தான் நல்ல நண்பன். தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களைப் படிக்க வேண்டும். படிக்கின்ற வழக்கம் தன்னம்பிக்கையை வளர்க்கும். தன்னம்பிக்கை கொண்டவர்கள், தங்களுக்கு ஏற்படுகின்ற தடைகளைத் தகர்த்துவிட்டு முன்னேறிச் செல்வர்.  அதற்கு நல்ல நூல்களே உங்களுக்குத் துணையாகும்.” என பேசினார்.

ஏப்ரல் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இப்புத்தகத் திருவிழாவில், பெற்றோர்களும், மாணவ மாணவியர்கள் பலர் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, மாதிரி அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் நிலையத்தின் தலைமை அதிகாரி நாகஜோதி மாதிரி அஞ்சல் நிலையத்தைத் தொடங்கி வைத்து, அஞ்சல் நிலையச் செயல்பாடுகளை குறித்து அனைவருக்கும் விளக்கினார்.