அனைத்து அணிகளிலும் அசத்தும் தமிழக வீரர்கள்! CSK அணியில் ஒருவர் கூட இல்லாததற்கு என்ன காரணம்

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐபில் போட்டியின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநிலங்களின் பெயரை கொண்டுள்ள அணியில் குறைந்தபட்சமாக அந்த இடத்தை சேர்ந்த ஒருவராவது இடம்பெற்று இருப்பார். ஆனால் சென்னை அணியில் அப்படி யாரும் இடம்பெறாதது நீண்ட காலமாகவே பேசுபொருளாக உள்ளது.

இந்நிலையில் அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்குபெற்ற தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக MLA வெங்கடேஸ்வரன், தமிழக இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் ஐபில் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக இளைஞர்களுக்கு பதிலாக வெளிமாநில இளைஞர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழர்கள் இல்லாத CSK அணியை தடை செய்ய வேண்டும் என்று பேசினார். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில் பிற ஐபில் அணியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர்களை பற்றி பார்க்கலாம்.

விஜய் சங்கர், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலும், நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். வருண் சக்கரவர்த்தி மற்றும் N. ஜெகதீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் உள்ளனர். மேலும் தினேஷ் கார்த்திக் RCB அணியிலும், ஷாருகான் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபில் ஏலத்தில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், மருகன் அஸ்வின் மற்றும் N. ஜெகதீசன் 20தில் இருந்து 90 லட்சத்திற்கு விலை போக, விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் 1 ல் இருந்து 5 கோடி வரை ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் 8 கோடிக்கும் அதிகபட்சமாக, ஷாருக்கான் 9 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். கிரிக்கெட் உலகில் இத்தனை டிமாண்ட் இருக்கும் தமிழக வீரர்களை சென்னை அணி புறக்கணிப்பதற்கான காரணம் கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழக வீரர்கள் இல்லாத CSK அணியை பாமக உள்ளிட்ட காட்சிகள் எதிர்க்க தொடங்கியுள்ள சூழலில், அடுத்த வருடமாவது சென்னை அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.