பிரதமர் மோடி தொடங்கி வைக்கும்  சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம், அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 12-வது வந்தே பாரத் ரயில், சென்னை – கோவை இடையே மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில், கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் எனவும், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மறுமார்க்கத்தில், மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை தவிர வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில், மொத்தம் 8 பெட்டிகள் 536 இருக்கைகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி சேர் கார் வகுப்பில் கோவையிலிருந்து சென்னை பயணிக்க உணவுடன் கூடிய கட்டணம் 1,215 ரூபாயாகவும், உணவு இல்லாமல் 1,057 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன ((executive chair car)) எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பில் உணவுடன் கூடிய கட்டணம் 2,310 ரூபாயாகவும், உணவு இல்லாமல் 2,116 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் இந்தியாவின் மினி புல்லட் ரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி, wifi வசதி, டிஜிட்டல் வசதி, தானியங்கி கதவு, சுழலும் இருக்கை, மற்றும் உணவு வசதி ஆகியன இடம்பெற்றுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சென்னை ஐசிஎப் – நிறுவனத்தில் வந்தே பாரத் ரயில் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் தனிசிறப்பு ஆகும்.