இந்தியாவில் அதிகரித்து வரும் இதய நோய் : தீர்வுகாண புதிய சிகிச்சை முறைகள் தேவை கே.எம்.சி.எச் மருத்துவர் லாரன்ஸ் ஜேசுராஜ் தகவல்

இந்தியாவில் அதிகரித்து வரும் மோசமான இதய நோய் பாதிப்புகளுக்கு தீர்வுகாண புதிய சிகிச்சை முறைகள் தேவை என்று கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய செயலிழப்பு சிகிச்சை நிபுணரும், இதயமின் அமைப்பு ஆலோசகருமான டாக்டர் எம்.லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

பலருக்கு இதய பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர்களின் நிலை மேலும் மோசம் அடையும் அபாயமும் உள்ளது. மோசமான இதய செயலிழப்பு காரணமாக நோயாளிகள் கடுமையான பிரச்சினைகளை சந்திக்கும் போது இதய செயலிழப்பு அறிகுறிகள் மேலும் அடுத்த நிலைக்கு செல்கிறது. இதற்கு நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்து முறையான சிகிச்சை பெறாததே காரணம் ஆகும்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறாமல் இருப்பதால் பலர் மரணம் அடையும் நிலையும் ஏற்படுகிறது. இதயசெயலிழப்பு கண்டறியப்பட்டு அதற்கு தரமான சிகிச்சையை பெற்ற போதிலும், 6 நோயாளிகளில் ஒருவருக்கு 18 மாதங்களுக்குள் இதயசெயலிழப்பு மோசமடைந்து வருவதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

தற்போதைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இதய செயலிழப்பு வழிகாட்டுதல்கள் மோசமான இதயசெயலிழப்பு நோயாளிகளை ஒரு தனித்துவமான பிரிவாக அங்கீகரித்துள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் அத்தகைய நோயாளிகளுக்கான வழக்கமான இதயபராமரிப்பு சிகிச்சையுடன் கூடுதல் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரை செய்கின்றன.

இது குறித்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய செயலிழப்பு சிகிச்சை நிபுணரும், இதய மின் அமைப்பு ஆலோசகருமான டாக்டர் எம்.லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், இதயம் சார்ந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது இந்தியாவில் உள்ள இதயநோய் நிபுணர்களுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது. தற்போது, அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு மிகவும் குறைந்த சிகிச்சை முறைகளே இங்கு உள்ளன. இங்கே நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், புதிய சிகிச்சை முறைகள் அதற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றன.

இந்த சிகிச்சை முறைகள் இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு, வாஸ்குலர்டோன், என்னும் சிறியதமனிகள் மற்றும் தமனிகளின் சுவர்களில் உள்ள மென்மையான தசைசெல்களின் சுருங்கும் செயல்பாடு, சுழற்சியின் மூலம் ரத்தஓட்டத்தை மேம்படுத்த உதவுவதாகவும் மருத்துவ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. இவை கடுமையான இதயநோயால் பாதிக்கப்பட்டு நோயாளிகளை இறப்பில் இருந்து தடுப்பதோடு, அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதையும் வெகுவாக குறைக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் டாக்டர் எம்.லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் இதயம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேம்பட்ட நவீனதொழில் நுட்பத்தில் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இதயநோயால் பாதிக்கப்பட்டு இங்கு வரும் நோயாளிகளில் கடுமையான இதயநோய் பாதித்த நோயாளிகளே அதிக அளவில் இருப்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் இதய பிரச்சினைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் பற்றி அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும். எந்தவொரு நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும், உயிர்வாழ்வதற்கும் ஏராளமான வழிகள் உள்ளன. அதற்கு ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.

இதை கருத்தில் கொண்டு இதயசெயலிழப்பால் பாதிக்கப்பட்டநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். அவ்வாறு செய்யும் போது அது மேலும், இதயசெயலிழப்பு மோசமடைவதை தடுப்பதோடு,நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 80 லட்சம் முதல் 1 கோடி பேர் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதய செயலிழப்பு நோயாளிகளின் சராசரி வயது 50 முதல் 60 ஆக உள்ளது. இதுவே மேற்கத்திய நாடுகளில் 60 முதல் 70 ஆக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் சற்று அதிகமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் 4 முதல் 7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மருத்துவமனை இறப்பு விகிதம் 10 முதல் 30.8 சதவீதமாக உள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 26 சதவீதமாக உள்ளது. இங்கு மோசமான இதயசெயலிழப்பு மற்றும் மிதமான இதய செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து நோயாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் மோசமான இதயசெயலிழப்பு நோயாளிகளுக்கு வளர்ந்து வரும் சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதை மருத்துவ ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.