பாரதியார் பல்கலைக்கு ஏ++ அந்தஸ்து

கோவை: தேசிய தரமதிப்பீட்டு குழு ( நாக்.,) ஆய்வின் முடிவில், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஏ ++ அந்தஸ்தை, பாரதியார் பல்கலை பெற்றுள்ளதாக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் தெரிவித்தார்.

தேசிய அளவில், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், மத்திய அரசின் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும்.

அத்துடன், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள, தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ”நாக்’ அந்தஸ்து சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இதன் அடிப்படையில், கல்லுாரி, பல்கலையின் தரம் நிர்ணயிக்கப்படுவதுடன், மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளின் நிதியை பெற இயலும்.

2016ம் ஆண்டு நாக்.,ஆய்வுகளின் முடிவில், பல்கலை 3.11 தரப்புள்ளிகளுடன் ‘ஏ கிரேடு’ பெற்று இருந்தது. புள்ளிகள் குறைந்து இருந்ததால், பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி முறை செயல்பாடுகளில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், நாக்., குழு கடந்த வாரம் பல்கலையில் ஆய்வுகளை மேற்கொண்டது.

பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், ”ஆய்வுக்குழு பல்கலையின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளது. தற்போது, 4க்கு 3.63 புள்ளிகளுடன் ஏ ++ கிரேடை பெற்றுள்ளது. மாநில கலை அறிவியல் பல்கலையில், தற்போது பாரதியார் பல்கலை முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து தொலைதுார கல்வி முறை செயல்பாடுகளை முழுமையாக செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.