31ம் தேதி தாக்கலாகிறது கோவை மாநகராட்சி பட்ஜெட்

கோவை மாநகராட்சி பட்ஜெட், வரும், 31ல் தாக்கல் செய்யப்படுகிறது. குப்பை வரி வசூலிப்பதோடு, சொத்து வரி உயர்த்தி இருப்பதால், வார்டு அளவிலான மேம்பாட்டு பணிகளுக்கு மண்டலங்களுக்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டுமென்கிற, எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கோவை மாநகராட்சியின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு – செலவு திருத்திய திட்ட அறிக்கை, 2023-24ம் ஆண்டுக்கான உத்தேச திட்ட அறிக்கை, நாளை (29ம் தேதி) தாக்கல் செய்யப்படுவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையை தவிர்த்து, மற்ற மாநகராட்சிகளில் ஒரே நாளில் பட்ஜெட் தாக்கல் செய்ய, துறை தலைமையில் இருந்து அறிவுரை வழங்கப்பட்டதை தொடர்ந்து, வரும், 31ம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

அன்றைய தினம் காலை, 10:00 மணிக்கு, விக்டோரியா அரங்கில் வரவு – செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு தாக்கல் செய்த, 2022-23ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில், ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொத்து வரி உயர்த்தப்பட்டது; குப்பை வரி வசூலித்திருப்பதால், மாநகராட்சி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது;

அதனால், வரும் 31ல் தாக்கல் செய்யும் திருத்திய திட்ட அறிக்கையில், பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.வரும் நிதியாண்டில் எதிர்பார்க்கும் வருவாயும், அதிகமாக இருக்குமென எதிர்பார்ப்பதால், மாநகராட்சி பொது நிதியில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, கவுன்சிலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

தலைவர்களின் எதிர்பார்ப்புமண்டல அளவில் வார்டு பணிகளுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை, வரும் நிதியாண்டில், 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

குறுக்கு வீதிகள், சந்துகளில் ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்; மழை நீர் வடிகால் கட்ட வேண்டும். சங்கனுார் பள்ளத்தை துார் வார வேண்டும், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும். திட்டச்சாலைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும். உள்விளையாட்டு அரங்கம் ஒதுக்க வேண்டும் என, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.