கே.ஐ.டி கலாச்சார விழா

கோவை, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியுடன் வெள்ளிக்கிழமை கல்லூரிகளுக்கிடையேயான “கே.ஐ.டி-உதயம்-2023” என்னும் ஒரு நாள் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார விழா கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விஜய் டிவி நியா நானா புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், இளைய சமுதாயத்தினருக்கு தொழில் கல்வி அறிவோடு கூடிய திறன் வளர்த்தல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவு ஆகியவை இன்றியமையாதது என்றும், இளம் வயதில் மாணவ மாணவிகள் கற்ற கல்வியையும், தனித்திறமைகளையும் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வரவேற்கிறோம் ஆனால் அதே சமயத்தில் அதற்கு அடிமையாகாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஸ்மார்ட் ஒர்க் என்கின்ற வார்த்தையை நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் கடின உழைப்போடு கூடிய ஒழுக்கம் நிறைந்த செயலே நிரந்தர வெற்றியை கொடுக்கும் அதை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டத்தில் நம் இளைய சமுதாயம் இருக்கிறது மற்றும் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளோடு கூடிய டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம் வேண்டும் அதை புரிந்து கொண்டால் மாணவர்கள் சாதனையாளர்களாக மாறலாம் என்றும் கூறினார். அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களோடு கலந்துரையாடலில் பங்கேற்றார்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் தொழில்நுட்ப உரை, அறிவியல் செய்முறைப் போட்டி, சுற்றுப் பிழைத்திருத்தப் போட்டி மற்றும் தொழில்நுட்ப வினாடி வினா உட்பட 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 1500 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். மேற்கண்ட போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுத்தொகையை வென்றார்கள். அதன் பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினர் ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி பெருமைப் படுத்தினர்.

இவ்விழாவில் கல்லூரித்தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி முதல்வர் ரமேஷ், கல்லூரி டீன்கள், கே.ஐ.டி உதயம் – 2023 ஒருங்கிணைப்பாளர்கள் தீபா, ராமச்சந்திரன், சிவஞானபாரதி, விஜய்குமார், கலாச்சார நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் நித்யா, கல்பனா மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.