“வணக்கங்க கோயம்புத்தூர்” : கோவையில் மேலும் ஒரு புதிய செல்பி பாயிண்ட்

கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

இதே போல் செல்வ சிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்வம்பதி, குமாரசாமி கிருஷ்ணாம்பதி குளங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பெரியகுளத்தின் கரைப்பகுதியில் ‘ஐ லவ் கோவை’ என்ற செல்பி ஸ்மார்ட் அமைக்கப்பட்டது. இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இதனிடையே கிருஷ்ணாம்பதி குளத்தில் “வணக்கங்க கோயம்புத்தூர்” என்ற வாக்கியம் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களின் பேச்சு வழக்கிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த வடிவம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் பலரும் இந்த வடிவத்தின் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.