குழந்தையை அரியவகை நோயிலிருந்து காப்பாற்றி கே.எம்.சி.ஹெச்.மருத்துவர்கள் சாதனை

பிறந்து இரண்டரை மாதங்களே ஆன பெண் குழந்தை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டது. அந்தக் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வந்துள்ளது. மற்றும் ஹைபோகிளைசீமியா என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவான நிலையும் இருந்தது. வேறு மருத்துவமனைகளில் இதற்கான காரணத்தையும் கண்டறிய முடியவில்லை, உரிய சிகிச்சையும் அளிக்க இயலவில்லை.

கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையில் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் அந்த குழந்தைக்குப் பிறவியிலேயே கணையக் கோளாறு இருப்பது தெரியவந்தது. டாக்டர் ராஜேந்திரன் மற்றும் டாக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் செயல்பட்ட மருத்துவக் குழுவினர் பெட்சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். அதன் மூலம் அக்குழந்தைக்கு நெசிடியோபிளாஸ்டோசிஸ் (Nesidioblastosis) என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது உடலுக்கு வழக்கமாகத் தேவைப்படுவதை விட அதிக அளவில் இன்சுலின் ஹார்மோனை கணையம் சுரப்பதால் இந்தநிலை ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாகக் குறைந்து வலிப்பு ஏற்படுகிறது. இது போன்ற நிலையில் தக்க நேரத்தில் உரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது குழந்தையின் மூளையை பாதித்துவிடும் அல்லது உயிருக்கே ஆபத்தாய் போய்விடும்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பல்வேறு புதிய மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த அளவு பலன் அளிக்காததினால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. கணைய அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பாரி விஜயராகவன் மற்றும் டாக்டர் என்.குமரன் ஆகியோர் மயக்க மருந்து நிபுணரான டாக்டர் ஹரீந்தர் சிங் உடன் இணைந்து ஓர் அரிய வகை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். கணையத்தில் சுமார் 75% சதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உடல் நிலை நன்கு தேறியது.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் சிவானந்தம் பராமரிப்பில் அக்குழந்தை நன்றாக உள்ளது.

அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த அரியவகை நோய்க்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து இதுவரை எந்த அறிவியல் மருத்துவ ஆவணங்களிலும் எந்தவித வழிகாட்டுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அளவுக்கு அதிகமாக கணையம் அகற்றப்பட்டால் எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை கவனத்தில் கொண்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவக் குழுவினர் ஓர் நூதன முறை அறுவை சிகிச்சையால் கணையத்தில் தேவையான அளவு மட்டுமே அகற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.

மிகவும் திறமையாகச் செயல்பட்டு பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை கே.எம்.சி.ஹெச்.மருத்துமனை செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி வெகுவாகப் பாராட்டினார். சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உதவிடும் f-DOPA PET ஸ்கேன் முதலான அதிநவீன மருத்துவ வசதிகளை மேற்கு மற்றும் தென் தமிழக பிராந்தியத்தில் பெற்றுள்ள ஒரே மருத்துவமனை கே.எம்.சி.ஹெச் மட்டுமே என்பதை டாக்டர் அருண் பழனி சாமி சுட்டிக்காட்டினார். அத்துடன் அதிநவீன வசதிகளுடன் கூடிய இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு குழந்தைகள் உடல் நலம் காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.