மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி மூலமாக மையத்தினை திறந்து வைத்தார்.

அதனை அடுத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கோவைக்கு இந்த மையத்தினை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார். மேலும், ஆயுர்வேதம், யுனானி சிகிச்சைகளை அளிக்கும் வகையிலான மருத்துவ மையங்களையும் கோவைக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.