டாக்டர் ஆர்.வி கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

கோவை காரமடை பகுதியில் உள்ள டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக பன்னாட்டுக் கருத்தரங்கம் செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் செயலர் சுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஓய்வு பெற்ற முதுநிலைப் பேராசிரியர் ராமதாஸ் பாலகிருஷ்ணன் மற்றும் ஓமன் நாட்டில் உள்ள தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறையின் பேராசிரியர் சுந்தரவடிவழகன் ஆகியோர் இணைய வழியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.

கருத்தரங்கின் முதல் அமர்வு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் தாஜுநிஷா தலைவராகவும், இரண்டாம் அமர்வு கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் சைபர் செல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ராமமூர்த்தி தலைவராகவும் இருந்து நடத்தினர்.

இதில் மொத்தம் 67 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் இக்கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ரூபா சான்றிதழ்கள் வழங்கினார்.