‘பாவம் – புண்ணியம்’ பற்றி ஏன் கவலைப்படத் தேவையில்லை?

சில ஆன்மீக முறைகள் எல்லா தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக தண்டனை உண்டு என்கின்றன. வேறு சில ஆன்மீக முறைகள் அனைத்திற்கும் மன்னிப்பு உண்டு என்கின்றன. இதில் எது உண்மை?

சத்குரு : உலகத்தில் தவறு என்பதே கிடையாது. ஆனால், உலகத்தில் சரியானது என்பதும் கிடையாது. ஆனால் எதைச் செய்தாலும் அதற்கென்று ஒரு விளைவு இருக்கிறது.

சரியானது என்றும், பாவமானது என்றும் எதுவும் கிடையாது. ஆனால், எந்த செயல் செய்தாலும் அதற்கு ஒரு விளைவு இருக்கிறது.

படைத்தல் என்பது காரணம், காரியம் இரண்டிற்கிடையே நிகழ்வதால், அனைத்து செயல்களுக்கும் பலன் இருக்கிறது. நீங்கள் எந்தச் செயலை வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த ஒரு செயல் பாவமானது என்றும், அந்தச் செயல் சரியானது என்றும் கூற மாட்டேன். ஆனால், செயலுக்கு ஏற்ற பலன் ஏற்படும்போது, ஆனந்தமாக அந்தப் பலனை உணர முடியுமென்றால், எந்தச் செயலை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.

ஆனால், இப்பொழுது ஆர்வத்தினால் ஒரு செயலைச் செய்துவிட்டு, பிறகு அதற்கேற்ற பலன் கிடைக்கும்போது அதை ஏற்க முடியாமல், அழுவதும் புலம்புவதும் கூடாது.

எதிர்பார்த்த பலன் கிடைக்காதபோது அழக்கூடியவராக நீங்கள் இருந்தால், எப்படி செயல் செய்வது என்று பார்த்து செய்ய வேண்டும். நீங்கள் இப்படி ஒவ்வொரு செயலையும் பார்த்து செய்தால், விழிப்புணர்வு என்பது உங்களுக்குள் தானாகவே வந்துவிடும். முன்கூட்டியே ஒரு செயலை இது நல்ல செயல் அல்லது இது கெட்ட செயல் என்று கூறிவிட்டால், விழிப்புணர்வே இல்லாமல் முட்டாள்தனத்துடன் இருந்துவிட முடியும்.

அனைவரும் நல்லது என்று ஒரு செயலைச் சொல்வதால் நாமும் அதையே செய்துவிடலாம் என்ற முட்டாள்தனத்தில் இருக்க நேரிடும். உங்களுடைய நன்மைக்கு எந்தச் செயல் தேவையோ அதைச் செய்ய வேண்டும். உங்களுடைய நன்மைக்கான செயலை, உங்கள் விருப்பப்படி நீங்கள் செய்யும்போது, மற்றவர்கள் விமர்சனம் செய்யலாம்.

ஆனால், உங்களுக்கு அதனால் பிரச்சனை இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம். மற்றவர்களின் பேச்சையும், எதிர் விளைவையும் ஆனந்தமாக ஏற்றுக் கொள்வது போன்ற நிலையில் நீங்கள் இருந்தால், எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு நீங்கள் அழுவது போன்ற நிலையில் இருந்தால் சிறிது கவனமாக செயல் செய்து கொள்ளலாம்.

விழிப்புணர்வாக வாழ்ந்தால் உங்களுடைய உயிருக்கு ஏற்றவகையில் செயல்படுவீர்கள். விழிப்புணர்வு இல்லாமல் செயல் செய்தால், இந்த கணத்தில் என்ன ஆர்வமோ அதைச் செய்வீர்கள். உங்களுடைய மனநிலையின் கட்டாயத்திலோ அல்லது உடல்நிலையின் கட்டாயத்திலோ அல்லது உணர்வு நிலையின் கட்டாயத்திலோ ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு, பிறகு அதன் விளைவினால் நீங்கள் போராடினால், அது மனிதன் வாழும் வாழ்க்கை அல்ல. அது விலங்கு வாழும் வாழ்க்கை.

இப்போது நமக்கு மிகவும் பசியாக இருக்கிறது. கண்முன்னே உணவும் இருக்கிறது. ஆனால் எல்லோர் தட்டிலும் உணவு விழும்வரை பொறுமையாகக் காத்திருந்து பிறகு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அளவுக்கு மிஞ்சிய பசியாக இருந்தாலும் எதிரில் உள்ள உணவைத் தொடாமல் சிறிது காலம் தாழ்த்தக் கூடிய இந்தத் திறமை மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது.

ஆனால் விலங்கு அப்படி அல்ல. விழிப்புணர்வு இன்றிதான் செயல்படும். ஆனால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்? எந்த ஒரு செயலையும் விழிப்புணர்வோடு நிர்ணயித்து நமக்கு என்ன தேவையோ, அதைச் செய்வதற்கான திறமையை பெற்றிருக்க வேண்டும். விழிப்புணர்வோடு செயல் செய்தால், உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையற்ற செயலைச் செய்வீர்களா? செய்ய மாட்டீர்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில், செயல்படும் போதுதான், தேவையற்ற ஏதேதோ செயல்கள் நம் வாழ்க்கையில் நிகழ்ந்துவிடுகின்றன.

நாம் இதைச் செய்தால் மட்டுமே நமக்கு ஆனந்தம் கிடைக்கும் என்ற ஒரு நிலையில் இருக்கும்போதுதானே கட்டுப்பாடு எழுகிறது? குறிப்பிட்ட விதமான செயல் செய்தால் மட்டுமே ஆனந்தம் கிடைக்கும் என்ற ஒரு தப்பான ஆர்வம், நாம் உருவாக்கியதுதானே? எப்போது ஆனந்தமாக இருக்கிறோமோ அப்போது சுலபமாக விழிப்புணர்வோடு இருக்க முடியும்.

ஆனந்தம் என்கின்ற அடிப்படையான மண்ணை நாம் நமக்குள் உருவாக்கினால் மட்டுமே விழிப்புணர்வு என்கிற விதையினை அதில் ஊன்ற முடியும். அடிப்படையில் ஆனந்தம் என்ற சரியான, பதமான நிலம் உருவாக்காமல் விழிப்புணர்வு என்ற விதையை அதில் வைத்தால், கல்லின் மீது வைத்த விதையைப் போன்று அது வீணாகிப்போகும்.

ஆகவே, முதலில் உங்களுக்குள் நீங்கள் ஆனந்த அலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஏதோ கட்டாயத்தினாலும், கட்டுப்பாட்டினாலும் ஒரு செயலைச் செய்யும் தேவை நமக்கு இருக்காது. விழிப்புணர்வுடன் செய்வதாக இருந்தால் எந்த செயல் செய்தாலும் அதில் பிரச்சனை இருக்காது. அப்போது நாம் எந்தச் செயலை வேண்டுனாலும் செய்து கொள்ளலாம்.