ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். சி.எஸ். துறை சார்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியுடன், ‘பெரு நிறுவனங்களின் நிலைத்தன்மையில் சமூகப் பொறுப்பின் தாக்கம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோவை வாய்த் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நித்தியானந்தன் தேவராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: மேலாண்மை எங்கிருந்து தொடங்குகிறது என்றால், நம்முடைய வீடுகளில் இருந்துதான். தாய் தான் சிறந்த மேலாளர். தந்தை நிதி அளிப்பவர் மட்டுமே. குடும்பத்தைத் திறமையாக நிர்வாகம் செய்பவர்கள் பெண்கள். சமுதாயத்தின் வளர்ச்சியில் 25 சதவீதம் பங்களிப்பவர்கள் பெண்கள் தான். அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் தான் சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.

பொருளாதார சங்கிலி சமூக வளர்ச்சியால் பின்னப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் மூலமாகவே நிதியாதாரம் உயர்கிறது.

இதில் நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பானது அறிவு, சமுதாயம், கலாச்சாரத்தில் இருந்து தொடங்குகிறது. பெறுவதை விட கொடுப்பதில் தான் மகிழ்ச்சியே அடங்கியுள்ளது. இந்த ஞானம் நம்மிடம் இருந்து தான் பிறக்கிறது. கல்விதான் மிகப்பெரிய சமுதாயப் பொறுப்பாகும் எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல மைய மேலாண்மைத் துறைத்தலைவர் விக்கிரமன், பெக்டான் டிக்கின்சன் நிறுவன கிளை மேலாளர் செல்வகுமார் ஆகியோர் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து 61 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.