ஹீட் ஸ்டிரோக்கில் இருந்து தப்பிப்பது எப்படி

கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதாக உணரப்படுகிறது. ஆரம்பமே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் எப்படி இருக்கப்போகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

கோடைக்காலத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் எனும் வெப்ப பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. வியர்வைச் சுரக்காமலோ, சுரந்தும் ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம். உடலில் நீர்ச் சத்துக் குறைந்தாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலில் உள்ள வெப்பநிலையும், பிஎச் அளவும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்யும். சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் தன் வெப்பநிலையைத் தானாகவே சமன்செய்துகொள்ளும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நம் உடல் உறுப்புகள் திடீரென்று தானாகவே செயலிழக்கத் தொடங்கிவிடும்.

நமது உடல் அதிக வெப்பநிலையினை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. ஆனால் வெப்ப பக்கவாதம் பாதிக்கப்படும்போது உடல் அதைச் செய்யத் தவறிவிடுகிறது.

நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று மயங்கிவிழுந்து, இறந்துவிடும் நிலையை ஹீட் ஸ்டிரோக் ஏற்படுத்தும். கோடை வெப்பம் தாங்காமல் பலர் இவ்வாறு உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர்.

உடல் சூடு அதிகரித்தல், வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், எரிச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

இதுபோன்று தோன்றினால் காற்றோட்டமான பகுதிக்குச் செல்ல வேண்டும். அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும். அதிக அளவிலான நீரைப் பருக வேண்டும். அப்படியும் சரியாகவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகலாம்.

முன்னெச்சரிக்கையாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது

வெயில் காலங்களில் சில உணவுகளைத் தவிர்ப்பதுடன் சில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீர்தான் கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான முக்கிய மருந்து. மற்ற காலங்களில் குடிக்கும் தண்ணீரின் அளவைவிட அதிகமாகக் குடிக்கவேண்டும். வெயிலில் வெளியே சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்லலாம்.

வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதைத் தவிர்க்க மோர், இளநீர், கூழ், பழச்சாறு போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் சாப்பிடலாம். முடிந்த அளவிற்கு பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதையும் தவிருங்கள். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தலாம்.

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவைகளை தவிர்ப்பதே நல்லது. இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் ஹீட் ஸ்ட்ரோக் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

கோடைக்காலத்தில் வெப்பம் காரணமாக ஏற்படும் எந்தவொரு பிரச்னையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அவை பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். உடலில் மாற்றங்களோ, அறிகுறிகளோ தெரியவந்தால் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.