காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 8 வது இடம்

உலகில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 8 வது இடம் பிடித்துள்ளது. அதிலும் காற்று மாசடைந்த 50 நகரங்களில் இந்தியாவில் 39 உள்ளதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐக்யூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐக்யூ ஏர் உலகின் மிகவும் காற்று மாசுடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 7,300 நகரங்களின் காற்றின் தரவுகளின் முடிவுகளை இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகில் மிகவும் மாசுடைந்த நாடுகளில் இந்தியா தற்போது 8 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இந்தியா இருந்து குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளன என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பைவிட 10 மடங்கு அதிகமாகும்.

மத்திய ஆப்பிரிக்காவில் சாட் என்ற நாடானது இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஈராக்கும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் 4வது இடத்தில் பக்ரைனும், 5வது இடத்தில் பங்களாதேஷும் 6வது இடத்தில் பக்ரைனும், 7வது இடத்தில் குவைத்தும் 9 மற்றும் 10வது இடங்களில் எகிப்தும், தஜிகிஸ்தானும் உள்ளன.

பல இந்திய நகரங்கள் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியலில் உள்ளன. 2017ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் 2,200க்கும் குறைவான நகரங்களே இருந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. டாப்-10 மெட்ரோ நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் நிர்ணயித்த பாதுகாப்பான அளவைவிட 5 மடங்கு அதிகம்.

பெருநகரங்களான ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் 2017-ம் ஆண்டிலிருந்து சராசரியை விட மாசு அளவு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட என்சிஆர் பிராந்தியங்களில் மாசு அளவு குறைந்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் 150 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என்றும் போக்குவரத்துத் துறையால் 20 முதல் 35 சதவீதம் மாசுபாடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும்,தொழில்துறை, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை மாசுபாட்டிற்கான பிற முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.