கோவை இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

கோவை இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளுடனான மாவட்ட ஆட்சியரின் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள வர்த்தக சபை அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடல் நிகழ்வாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஆட்சியர் கிராந்தி குமார் பாடி., யிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ஸ்ரீ ராமுலு, வர்த்தக சபையின் முன்னாள் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதில், கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்திற்கான வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்.

எல் & டி பைபாஸ் சாலையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அவிநாசி சாலை மேம்பாலம் கட்டுமான பணிகளால் சில இடங்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பதிப்பு ஏற்படுகிறது, இதற்கு தீர்வு காணவேண்டும்.

கோவையில் பல இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் போக்குவரத்தை பாதிக்கிறது. இவை சரி செய்யப்பட வேண்டும்.

குறிச்சி குளம் பராமரிப்பு மற்றும் நகருக்கான உட்கட்டமைப்பைப் மேம்படுத்துதல்.

வர்த்தகப் பகுதியில் அதிக அளவிலான மக்கள் வணிகம் செய்ய வருவதினால், அப்பகுதிகளில் கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகருக்கான கோரிக்கைகள் முன்வைத்து பேசப்பட்டது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், சில திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்.