மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கேரளா அணி வெற்றி

இளைஞர்கள் இணைந்து சி.பி.இ.பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் எனும் இளைஞர்கள் இணைந்து சி.பி.இ.பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு அமைப்பின் மூலமாக, கடந்த ஐந்து வருடங்களாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான டி 10 பி.பி.சி.சி.எல் கிரிக்கெட்தொடர் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது சீசனாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான டி 10 பி.பி.சி.சி.எல் கிரிக்கெட் தொடர் போட்டி கோவையை அடுத்த வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சுமார் 96 கார்ப்பரேட் நிறுவன அணிகள் பங்கேற்று விளையாடிய இதில், காலிறுதி போட்டியில், போஷ் இக்னிட்டேர்ஸ், கம்மின்ஸ், குவின்டெசன்ஸ், ஆப்ஜக்ட் வேய்ஸ் ஆகிய நான்கு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் இறுதி போட்டியில் போஷ் நிறுவனத்தின் இக்னிட்டேர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆடிய தமிழ்நாடு கேரளா அணிகளில், கேரளா அணி வெற்றி பெற்றது. மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள் மற்றும் நிதி அளிக்கும் வகையில் நடைபெற்ற இதற்கான பரிசளிப்பு விழா மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது ஜியாபுதின், மற்றும் என் நிலம் பில்டர்ஸ் உரிமையாளரும், கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான அரிமா செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தொடர் நாயகன் விருதை, தினேஷ், சிறந்த பந்து வீச்சில் கோபாலகிருஷ்ணன், சிறந்த பேட்ஸ்மேனாக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில், வெற்றி பெற்ற கேரள அணிக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளையும், இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு பதினைந்தாயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தனர்.