விஐ செயலி மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் வோடபோன் ஐடியா

உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் தங்களின் கனவு வேலை வாய்ப்புகளை கண்டறிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா இந்தியாவின் மிகப்பெரிய வேலை தேடல் தளமான அப்னாவுடன் இணைந்து பெண்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை தங்களின் விஐ செயலி மூலம் வழங்குகிறது.

பெண்கள் இந்த செயலி மூலம் ஆசிரியர், டெலி காலர்ஸ், வரவேற்பாளர் பணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி சம்பந்தமான பல்வேறு தகவல்களை கொண்டுள்ள இந்த செயலியில் பகுதி நேர வேலைகளும், வீட்டில் இருந்து பணி புரிவதற்கான ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

அவற்றில் பெண்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகளை தேர்வு செய்யலாம். விஐ செயலி பல்வேறு துறைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கும், அதிகமான பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும் உறுதுணையாக இருக்கும். மேலும் கூடுதலாக உலக மகளிர் தினத்தையொட்டி சிறப்பு சலுகையாக அப்னா ஆன்லைன் தளத்துடன் இணைந்து வேலை உத்தரவாதத்துடன் கூடிய டெலி–காலர் பயிற்சி திட்டத்தை 5000 ரூபாய் சலுகை கட்டணத்தில் வழங்குகிறது.

பெண்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் விதமாக இந்தியாவின் முன்னணி ஆங்கிலம் கற்பித்தல் தளமான என்குருவுடன் இணைந்து சிறப்பு சலுகையாக 50 சதவீத தள்ளுபடி கட்டணத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு ஆங்கில பயிற்சி வகுப்பையும், ஏராளமான நேரலை வகுப்புகளையும் நடத்த இருக்கிறது.

பெண்கள் பல்வேறு பணிகளில் சேருவதற்கும், தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் அப்னா மற்றும் என்குருவுடன் இணைந்து, பெண்களுக்கான தொழில் ஆலோசனைகள், ஆங்கிலம் பெண்களை எவ்வாறு மேம்படுத்துகிறது உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ச்சியான வெப்பினார்களையும் வோடபோன் இந்தியா நடத்த இருக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தமான சலுகை திட்டங்களை மார்ச் 14–ந்தேதி வரை ‘விஐ செயலி’ வழங்குகிறது.