“அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் மனித வளத் தலைநகராக இந்தியா திகழும்” – அண்ணாமலை பேச்சு

இன்னும் 20 ஆண்டுகளில் உலகிலேயே மனிதர்கள் பயன்பாட்டில் தலைமையாக இந்தியா மாறும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, வரும் 2039 இல் உலக அளவில் 100 கோடி இந்தியர்கள் வேலையில் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பெரியசாமி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மற்றும் தலைவர் பெரியசாமி கௌரவ விருந்தினராக கலந்துகொண்டனர். பள்ளி தாளாளர் பிரதேவ் ஆத்திவேல் தலைமை வகித்தார். பள்ளியின் சாதனைகளை தாளாளர் ஆஷா ஜனனி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் மனித வளத் தலைநகராக இந்தியா திகழும், அதில் இன்றைய மாணவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. வரும் 2039-ல் நூறுகோடி இந்தியர்கள் உலக அளவில் வேலையில் இருப்பார்கள்.

பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு முதல் குரு என குறிப்பிட்ட அண்ணாமலை, தற்போதைய காலகட்டத்தில் எல்லா பெற்றோருக்கும் நேரம் குறைவாக இருக்கிறது.

இரும்பு போன்ற தோல், தைரியமான இதயம், புத்திசாலித்தனம் மற்றும் ஞானம் நிறைந்த மனம் கொண்ட இளைஞர்களை சுவாமி விவேகானந்தர் தேடினார். நாட்டிலுள்ள ஒரு பள்ளி அத்தகைய மாணவர்களை வழங்க முடிந்தாலும், இந்தியாவின் பெருமை பன்மடங்கு அதிகரிக்கும்.

கருத்துகளை மனப்பாடம் செய்து விடைத்தாளில் எழுத வைப்பதே கல்வியின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. மாணவர்களை வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவர்களாக ஒளிரச் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு இதுபோன்ற கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக பள்ளி மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட்டு குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.