
சமீப காலமாக காலநிலை மாற்றம் என்ற வார்த்தை அதிகமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது என்ன காலநிலை மாற்றம் என்று பார்த்தால், புவி வெப்பமயமாதல் என்று அதற்கு ஒரு பெயர் வைத்து பூமி சூடாகிக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
கார்பன் டை ஆக்சைடு வெளிவிடும் அளவு அதிகரித்து அதன் விளைவாக பூமி பல தீமைகளை சந்திக்கப் போகிறது என்கிறார்கள். இன்னும் ஆழமாகப் பார்த்தால், வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் பூமி வெப்பநிலை 1.5 டிகிரி அதிகரித்தால் பல எதிர்மறை விளைவுகள் உண்டாகி உலகத்தின் பல பகுதிகளிலும் பேரிடர்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இது உண்மையா என்று பார்த்தால் 100% உண்மை என்பது போல காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்து உலகத் தலைவர்கள் எல்லாம் கவலை தெரிவித்து இருக்கிறார்கள். அதிக கரியமில வாயுவை வெளிவிடுவதில் வளர்ந்த நாடுகள் இருப்பதும், அவை வளரும் நாடுகளான இந்தியா போன்றவை மீது இது குறித்த சுமையை ஏற்றுவதும் நடந்து முடிந்திருக்கிறது.
ஒருபுறம் அதிக மக்கள் தொகை, அதற்கு தேவையான தொழில் வளம், வேலைவாய்ப்பு என்று வளரும் நாடுகள் திணறி வருகின்றன. இன்னொரு புறம் இதற்கான ஆதரவும், நிதி உதவியும் விரைந்து அளிக்கப்பட வேண்டிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்ப்பதும் கண்கூடாக தெரிய வருகிறது.
இந்த சூழலில் தான் சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் 2050 க்குள் புவி வெப்பமயமாதலை தடுத்து, குறைக்காவிட்டால் அதனால் ஏற்படும் பல்வேறு பேரிடர்களை பட்டியலிட்டு வருகின்றனர். காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், உலகின் பல பகுதிகளிலும் பற்றி எரியும் காட்டுத்தீ, உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம், கடல்நீரால் கபளீகரம் செய்யப்பட்ட நிலப்பகுதிகள், அதனால் பாதிக்கப்பட உள்ள கடற்கரை ஓர நகரங்கள், வட துருவம் தென் துருவம் போன்ற பகுதிகளில் உருகும் பனி, மலைகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் புதிய நிலப்பரப்புகள் அழியும் நிலை, கூடவே காணாமல் போகப் போகும் பல வகை உயிரினங்கள், பருவம் தப்பி உருவாகும் அதீத மழை மற்றும் வறட்சி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்நிலையில்தான் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் விளைவுகள் குறித்து கிராஸ் டிபன்ஸ் இனிசியேடிவ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது.
உலகமெங்கும் உள்ள நாடுகளிலிருந்து 2,600 மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 2050-ல் இந்த பகுதிகளில் உருவாகும் காலநிலை மாற்றங்களின் விளைவுகள் கணக்கிடப்பட்டன. இதில் கொடுமையான செய்தி என்னவென்றால் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தான் ஏற்படும் என்பது தான்.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 2600 மாநிலப் பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்படப் போகும் 200 இடங்களில் 114 இடங்கள் ஆசியாவில் தான் உள்ளன. குறிப்பாக சீனா, இந்தியாவில் உள்ளன. சீனாவின் பீகிங், இந்தோனேசியாவின் ஜகார்த்தா, ஹோசிமின், தைவான், இந்தியாவின் மும்பை, பாகிஸ்தான் பஞ்சாப் போன்றவை முதல் 100 இடங்களுக்குள் உள்ளன.
இந்தியாவில் பீகார் 22 ஆம் இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் 25 ஆம் இடத்திலும், அஸ்ஸாம் 28 ஆம் இடத்திலும், ராஜஸ்தான் 32 ஆம் இடத்திலும், தமிழ்நாடு 36 ஆம் இடத்திலும், மகாராஷ்டிரா 38 ம் இடத்திலும், குஜராத் 48 ஆம் இடத்திலும், பஞ்சாப் ஐம்பதாம் இடத்திலும், கேரளா 52 ஆம் இடத்திலும் உள்ளன.
காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் சாதாரணமானவை அல்ல. கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் பருவம் தவறி வந்த மழை வெள்ளத்தால், அதீத மழையால் பாகிஸ்தான் நாட்டில் 30 சதவீதம் பாதிக்கப்பட்டது.
இன்றைய தேதிக்கு அங்கே இங்கே என்ற சுற்றி கால நிலை மாற்றம், நம் வீட்டு வாசல் கதவையும் தட்டிக் கொண்டு நிற்கின்றது என்பதுதான் உண்மை. இந்தியாவில் உற்பத்தி மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் என்று மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்? இவற்றையெல்லாம் வேலைவாய்ப்புக்கு நம்பியுள்ள மற்ற மாநிலங்களின் நிலை என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்.
நமது நாடு 140 கோடி மக்கள் வசிக்கின்ற நாடு. காலநிலை மாற்றம் பற்றிய சிக்கலை எப்படி சமாளிக்க போகிறோம் என்று ஆட்சியாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதைத்தான் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
மரம் வைப்போமோ, வாகன புகையைக் கட்டுப்படுத்துவோமோ, தொழிற்சாலை புகையை கட்டுப்படுத்துவோமோ, வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுவோமோ, இவை போல என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோமா. நாம் இந்த காலநிலை மாற்றத்தை நேர் முறையில் எதிர் கொண்டு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது ஒன்றே அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடிய கைமாறு.