ரொனால்டோவை அலறவிட்ட அல் பேட்டின்

சௌதி புரோ லீக்கில் அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ரொனால்டோவின் அல்-நாசர் அணி, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசமாக்கியது.

கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி புரோ லீக், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உள்நாட்டுத் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

முந்தைய 3 ஆட்டங்களில் இரு முறை ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றார்.

சௌதி புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதில் அல்-நாசர் அணிக்கும், அல்-இட்டிஹாட் அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நீடிக்கிறது.

அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மீண்டும் முதலிடத்தப் பிடிக்கலாம் என்ற நிலையில் அல்-நாசர் அணி இருந்தது.

அல்-நாசர் அணி கடந்த செப்டம்பருக்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவே இல்லை. மறுபுறம், அல்பேட்டின் அணியோ நடப்புத் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 12 ஆட்டங்களில் அல்-நாசர் அணி 9 முறையும், அல்-பேட்டின் அணி 3 முறையும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் 39 கோல்களை அடித்துள்ள அல்-நாசர் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தைக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது.

கோல் வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர். குறிப்பாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்கடி எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி இருந்தார்.

இறுதிக்கட்டத்தில், அல்-நாசர் அணிக்கு சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வந்த முகமது அல்-ஃபேட்டில் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர் அடித்த கோல் அல்-நாசர் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து அல்-பேட்டின் அணி மீளும் முன்பே, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் அடித்து, ‘சௌதி புரோ லீக்கில் யார் மாஸ்’ என்று அல்-நாசர் அணி நிரூபித்தது.

முகமது மாறன் இந்த கோலை அடித்து அல்-நாசர் அணிக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.