தீவன தேவையால் மக்காச்சோளம் விலை அதிகரிப்பு – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2022-23 ஆம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் சுமார் 9.5 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடபட்டு 33.62 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. இந்தியா 2020-21 ஆம் ஆண்டு (அக்டோபர் 2021 – செப்டம்பர் 2022), 3.43 மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 3.70 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

இந்திய மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்வதில் வங்கதேசம் முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து நேபாளம் மற்றும் வியட்நாம், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டில் 4 லட்சம் எக்டர் பரப்பளவில் 25.64 இலட்சம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளத்தின் வரத்தானது ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. இம்மூன்று மாநிலங்கள் தமிழ் நாட்டின் மக்காச்சோள தேவையை 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.

கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பதின் காரணமாக உள்நாட்டு சந்தையில் மக்காச்சோளத்தின் விலை சமீபகாலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

ஆய்வுகளின் அடிபடையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் ஏப்ரல் வரை குவிண்டாலுக்கு ரூ.2000 முதல் ரூ.2200 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.