விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு மூன்று தங்கப் பதக்கம்

அகில இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 21 வது விளையாட்டுப்
போட்டியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஹரியானாவின் ஹிசார், சிசிஎஸ் ஹரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் 65 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 2800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ ஓட்டம், தடை ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்கள், பத்து வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்றனர். நான்கு அணிகளை வென்று, ஆடவர் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் 65 புள்ளிகளுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த தடகள சாம்பியன்ஷீப்பில் இரண்டாம் இடத்தை பிடித்தது. பதக்கம் பெற்றவர்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டினார்.