வறண்டு காணப்படும் வெனிஸ் கால்வாய்கள்

இத்தாலியின் வெனிசு நகரம் என்றாலே அழகான கட்டுமானங்கள், மனதை கொள்ளை கொள்ளும் படகு பயணங்கள் என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆனால் தற்போது வெனிஸில் உள்ள புகழ்பெற்ற கால்வாய்கள் வறண்டு சேறும், சகதியமாக காட்சியளிக்கிறது.

வடக்கு இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தின் தலைநகரான வெனிஸ், அட்ரியாடிக் கடலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சாலைகள் இல்லை, கால்வாய்கள் மட்டுமே முக்கிய போக்குவரத்துக்கு வழியாக உள்ளன. அலுவலகம் செல்பவர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரும் கால்வாய் வழியாகத்தான் பயணிப்பார்கள்.

தற்போது வெனிஸில் சுற்றுலா தளங்களில் முக்கிய பங்கு வகிக்கும் கால்வாய்கள் காலநிலை மாற்றத்தால் வறட்சியடைந்து காணப்படுகிறது. காலநிலை மாற்றம் உலகில் உள்ள இயற்கையான பல நிகழ்வுகளை மாற்றி வருகிறது. அதன் தீவிர விளைவுகள் எல்லாம் நம் கண் முன்னே அரங்கேறத் தொடங்கிவிட்டது. சாலைகளை விட நதி போக்குவரத்தையே அதிகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்த நகரத்தில் இப்போது சிறு கால்வாய்கள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், நகரின் பெரும்பாலான போக்குவரத்து தடைபட்டு நிற்கிறது.

கடந்த ஜூலை மாதம் இத்தாலி 70 ஆண்டுகளில் சந்திக்காத வறட்சியை கண்டது. தற்போது மீண்டும் இத்தாலியில் கடும் வறட்சி வரப்போகிறதா என மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வடமேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து அட்ரியாடிக் வரை ஓடும் இத்தாலியின் மிக நீளமான நதியான போ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழக்கத்தை விட 61% குறைவான பனிப்பொழிவையே பெற்றுள்ளது. பொதுவாக வெனிஸில் வெள்ளம் ஏற்பட்டு விடுமா என்று தான் அச்சம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக நதியோட்டத்தில் குறைந்த அலைகளை எதிர்கொள்வதால், வறட்சியை எதிர்கொண்டு வருகிறது.

மழையின்மை, வறண்ட குளிர்கால வானிலை, உயர் அழுத்த அமைப்பு, முழு நிலவு மற்றும் கடல் நீரோட்டங்கள் போன்ற காரணிகளின் கலவையால் இதுபோன்று நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஆல்ப்ஸ் மலை தொடரில் பனி பொலிவும் குறைவாகவே ஏற்பட்டுள்ளது என்பதால் இத்தாலியின் நதிகள் மற்றும் ஏரிகளில் நீர்வரத்து குறைந்து வறண்டு விட்டதாக கூறுகின்றனர்.

2020 முதல் 2021 வரை குளிர்காலத்தில் இருந்து அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை சூழ்நிலை தற்போது மேலும் மோசம் அடைந்து வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தாலிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.ஆர் காலநிலை நிபுணர் மஸ்ஸிமில்லியானோ கூறுகையில்: இத்தாலியின் வறட்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. வடமேற்கு பிராந்தியங்களில் 500 மில்லி மீட்டர்கள் மழை பெய்தால் மட்டுமே குறைந்தபட்ச சாதாரண நிலையை மீட்டெடுக்க முடியும் என்றும் குறைந்தது 50 நாட்கள் மழை தேவை என்றும் கூறியுள்ளார்.

போ நதி மட்டுமல்லாது வடக்கு இத்தாலியில் உள்ள கார்டா ஏரியின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவில் குறைந்துள்ளது. இதனால் ஏரியில் உள்ள சிறிய தீவான சான் பியாஜியோவிற்கு நிலப்பரப்பிலேயே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான் வசந்த காலத்தின் பிற்பகுதியில் காணப்படும் மிதமான வெப்பநிலையை ஐரோப்பா எட்டியுள்ளது. இனி குறைந்த அளவிலான மழையாவது பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், வெனிஸ் நகரின் கால்வாய்களில் எப்போது ‘கோண்டோலா’ எனும் படகு சவாரி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரியவில்லை. இதனால் சுற்றுலா மற்றும் போக்குவரத்துக்கு சார்ந்த தொழில்களை நிச்சயம் பாதிக்கப்படும் என தெரிகிறது.