வாகனங்களை நாய் துரத்த காரணம் என்ன?

வாகனங்களை கூட்டமாகவோ, தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படி துரத்துவதால், ஏராளமான வாகன ஓட்டிகள் வீதி விபத்துக்களில் சிக்கியும் வருகின்றனர்.

நாய்கள் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்ந்தால் மட்டுமே மனிதர்களிடம் குழைந்து நடத்துக் கொள்ளும். தனது மனித நண்பனுக்கு நேர்மையாக நடந்து கொள்ளும். இதுவே தெருவில் வசிக்கும் நாய்கள் அப்படி பழக்கப்படுவதில்லை. சாலையில் போவோர், வருவோரை தூரத்தும். சாலையில் செல்லும் வாகனங்களை பின் தொடர்ந்த படியே வரும். இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கும் நிகழ்ந்து இருக்கலாம்.

நாய்கள் ஏன் ஓடும் கார், இரு சக்கர வாகனங்களை துரத்துகின்றன என நீங்கள் யோசிக்கலாம். வீட்டு விலங்குகளான நாய்கள் எவ்வளவு நட்பு உறவில் இருந்தாலும், அவை காடுகளை சேர்ந்த விலங்குகளான ஓநாய், நரி மற்றும் குள்ள நரிகளின் குடும்பத்தில் மரபணுவில் இருந்து வந்த விலங்குகள் என்பதை மறந்து விடுகிறோம்.

அவற்றை போலவே இலக்கை நகர்த்துவதன் மூலம் தூண்டப்படும் உள்ளுணர்வைகளை கொண்டுள்ளன. இது ஒரு வன்முறை யுக்தி அல்ல. மாறாக, இரையை தேடுவதற்கும், அதனை பின் தொடர்வதற்கும், இயல்பாக அதன் உடலில் இருந்து நீர் சுரப்பதும் நிகழ்கின்றன. சிலவகை நாய்களில் இந்த இயல்பு மட்டுப்படுத்திக் காணப்படும். வேறு சிலவற்றில் அதிகமாக இருக்கும்.

வீட்டிற்கு புதிதாக ஒருவர் வருகிறார் என்றால், அவரை பார்த்து நாய்கள் குரைக்கும். அதற்கு என்ன காரணமோ, அதே காரணத்திற்காகதான் வாகனங்களையும் நாய்கள் குரைத்து கொண்டே துரத்துகின்றன. வீட்டிற்கு வரும் புதிய நபர்களை நாய்கள் அந்நியர்களாக கருதும். அவர்களை நாய்கள் நம்பாது. அதேபோன்று தங்கள் வாழ்விடத்திற்குள் வரும் அறிமுகம் இல்லாத புதிய வாகனங்களையும் குரைத்து கொண்டே துரத்துவதை நாய்கள் வழக்கமாக வைத்துள்ளன.

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு பெரும்பாலும் தூக்கி எறியப்படும் பந்தை எடுத்து வரும் விளையாட்டு பிடிக்கும். இது அதன் வேட்டையாடும் இயல்போடு தொடர்புடையவை. இந்த இயல்பு தான், அதனை பூனைகள், குழந்தைகள், அணில் மற்றும் பிற நாய்களை துரத்த தூண்டுகின்றன. சில சமயங்களில் ‘டைம் பாஸ்’ செய்வதற்காகவும் கூட வாகனங்களை, நாய்கள் துரத்துகின்றன.

அல்லது ஏதேனும் புதிய விளையாட்டை கண்டுபிடித்து, சுவாரசியமாக விளையாட கூடும். நாய்களுக்கு இயல்பிலேயே மோப்ப உணர்வு அதிகம் இருப்பதால், அவை தங்கள் பகுதியில் ஊடுருவும் நபரை உடனடியாக அடையாளம் காணும். அதனால் தான் கடந்து செல்லும் மோட்டர் வாகனங்களை பார்த்து அவை குறைக்கின்றன.

நாய்கள் வண்டிகளின் டயர்களில் சிறுநீர் கழிக்கும் போது, ஒரு வித வினோத துர்நாற்றம் வீசக்கூடும். இந்த வாகனங்கள் வேறு பகுதிகளை கடக்கும் போது, அதில் இருந்து எழும் நாற்றம் வேறு ஒரு நாய் தனது பகுதியில் புகுந்து விட்டதோ என்ற அச்சுறுத்தலில், அந்த வாகனங்களை பின் தொடர்ந்து குறைக்கின்றன. ஒரு பகுதியில் இருந்து தனது எதிரியை வெளியேற்றுவதை விட, ஒரு நாய் அதன் பகுதியில் வேறு எப்படி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.

சில சமயங்களில் நாய்கள் வேட்டையாடுவதற்காக அல்லாமல், தனக்கு நெருக்கமான பிற நாய்கள் ஏதேனும் வாகன விபத்தில் இறந்திருக்கும் நிலையில், அந்த துக்கம் தாளாமல் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போல, வேறு எந்த வாகனத்தை பார்த்தாலும் துரத்தி சென்று குறைக்க கூடும்.

மேலும், அதிகமான சத்தத்தை நாய்கள் விரும்பாது. அவை வாகனங்களை துரத்துவதற்கான மற்றொரு காரணம். வாகனங்கள் அதிகமான சத்தத்துடன் இயங்கும்போது, நாய்கள் அச்சமடையும். இந்த அச்ச உணர்வு, துரத்த தூண்டுகின்றன. சாதாரண மனிதர்களால் கேட்க முடியாத சத்தத்தை கூட, நாய்களால் துல்லியமாக கேட்க முடியும். அந்த அளவிற்கு அவை உணர்திறன் மிக்கவை.

அத்துடன் சில சமயங்களில் வாகனங்களின் டயர்கள் சுற்றுவதும் கூட நாய்கள் துரத்த காரணமாக அமைகிறது. டயர்கள் வேகமாக சுற்றும்போது நாய்கள் கவரப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சியை காணும் சமயங்களில் எல்லாம், அதனை விளையாடுவதற்கான நேரமாக நாய்கள் கருதி கொள்கின்றன. அப்போது வாகனங்களை துரத்துவது என்பது, நாய்களை பொறுத்தவரையில் பந்துகள் அல்லது பொம்மைகளுடன் விளையாடுவதை போன்றது.