நாளை கோனியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு மாசித் தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பிப்ரவரி 14 ஆம் தேதி பூச்சாட்டு நிகழ்வும், பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டும் நடைபெற்றது.

தொடர்ந்து நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு மற்றும் வெள்ளை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பிப்ரவரி 28ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாசித் தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான தேர் வடம்பிடித்தல் நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறுகிறது. தேர் நிலையில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளை கடந்து மீண்டும் திருத்தேர் தோ்நிலையை அடைகிறது.

தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியில் பேரூராதீனம், சிரவையாதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.