தாய்மொழி ஒரு இனத்தின் அடையாளம்!

பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் ஆகிய அனைத்தும் தாய்மொழியின் அடிப்படையிலேயே உருவாகிறது.

தாய்மொழி என்பது தாய் சொல்லித் தந்த மொழி மட்டுமல்ல தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி என்று மகாகவி பாரதி நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தாய் மொழியின் மீதான பற்று நமக்கு இருப்பது மட்டுமல்ல நம் தலைமுறைக்கும் அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தாய்மொழியை தவறு இல்லாமல் பேசுவதற்கு இயலாத ஒரு தலைமுறை உருவாவது என்பது தேசத்தின், தேசிய உணர்வின் அவமானத்தின் அடையாளமாகும்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருது மொழி மட்டுமே என்று அறிவித்த பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 1952 இல் மொழிக்காக போராடிய இயக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ரஃபீக்குல் இஸ்லாம் என்ற வங்க மொழி அறிஞர் வலியுறுத்திய தீர்மானத்தை 1998 ஆம் ஆண்டு முன்மொழிந்து அதனடிப்படையில் யுனஸ்கோ அமைப்பு 1999 இல் நவம்பரில் அங்கீகரித்து 2000 ஆண்டிலிருந்து உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

“மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம்” என்று ஐ.நா தாய்மொழி நாள் செய்தியாக குறிப்பிட்டது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 1937 இல் சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி பதவி ஏற்ற பின்னர், 1938 ஜூன் மாதம் முதல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக அறிவித்த போது,
இந்தி எதிர்ப்புப் போர் துவங்கியது .

மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதன், கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. நீதிக்கட்சி தலைவர்களான ஏ.டி. பன்னீர்செல்வம், தந்தை பெரியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் துவங்கியது.

ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீசார் அடக்குமுறைக்கு பலியாகி தாளமுத்து, நடராசன் ஆகியோர் இன்னுயிர் நீத்தனர். உலகத்தில் தாய்மொழிக்கான போரில் இறந்தவர்கள் என்பதில் வங்காளத்திற்கு முந்திய வரலாறு தமிழுக்கு உண்டு.

உலகில் கடந்த நூறு ஆண்டுகளில் வழக்கில் இருந்த 7,000 மொழிகளில் தற்பொழுது 3,000 மொழிகள் மட்டுமே வழக்கில் இருப்பதாக மொழியியல் ஆய்வுகள் பட்டியலிடுகிறது.

உலக வரலாற்றில் தொன்மையான 6 மொழிகள் மட்டுமே செரிவான கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கியதாக கருதப்படுவதில் கிரேக்கம், இலத்தீன், சீனம் ஆகியவற்றோடு நம் தாய்மொழியான தமிழும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது பெருமைக்குரியது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று தொடர்ச்சியும், மரபும் உள்ளது நமது தமிழ்மொழி, இந்த வரலாறும் தொடர்ச்சியும் ஒருசில மொழிகளுக்கு மட்டும் தான் உண்டு. அதிலும் பழைமையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை சாதாரணமாக படிக்கவோ புரிந்து கொள்ளவோ இன்றைய தலைமுறையால் இயலவில்லை. வரலாற்றுத் தொன்மையான சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை.

புத்தர் பேசிய பாலி மொழியும், இயேசுபெருமான் பேசிய அராமிக் மொழியும் இன்று நடைமுறையில் இல்லை. ஆனால் இளமை குன்றாத தனிச்சிறப்புடன் அன்னை தமிழ் மொழி இன்றும் இலக்கியச் செறிவோடும், இலக்கண மரபோடும், பேச்சு மொழியாகவும் உலகில் உள்ள பல நாடுகளில் வாழ்வியலோடு வழக்கத்தில் உள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்திய திருக்குறள் இன்றும் வாசிக்கப்படுகிறது. மலேசியாவில் தமிழ் பள்ளிகள் ஏராளம் இருக்கிறது, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்சு, நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர தமிழை பயிற்றுவிக்கிறார்கள்.

வளைகுடா நாடுகளிலும் தமிழ் அமைப்புகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி, “தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பழமைக்குப் பழமையாய், பின்னர் புதுமைக்கும் புதுமையாய், காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அன்னை தமிழ் மொழியை, இந்த தாய்மொழி தினத்தில் தலைநிமிர்ந்து வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்வதோடு, தமிழ் தொடர்ச்சிக்கும், வளரச்சிக்கும் பங்களிப்பை வழங்குவோம்.

நாமும், நமது தாய்மொழியான தமிழை பாதுகாப்போம்.
இயன்றவரை தமிழில் பேசுவோம்.
தமிழால் இணைவோம்.
தமிழை உயர்த்துவோம்.

– அ. முகமது ஜியாவுதீன்
முன்னாள் மாவட்ட நீதிபதி