மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன்: வழிகாட்டியவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர்!

அரசியலும், வழக்கறிஞர் பணியிலும் நேர்மையாளரும் உயர முடியும் என்பதன் அடையாளமாக வாழ்ந்தவர். மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன். பிப்ரவரி – 17 அவரது நினைவு நாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அரசு வழக்கறிஞராக இருந்தவர்.

மாபெரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக்கழக மாநகர் மாவட்ட செயலாளராகவும்,
பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதும் விருப்பு, வெறுப்பின்றி அனைவரையும் நேசித்தவர்.
கடுமையான பணிகளுக்கிடையிலும் குழந்தைகளையும் குடும்பத்தையும் நேசிக்க கற்றுக் கொடுத்தவர்.

சுயமரியாதை சுடராக தன் குழந்தைகளை கல்வியோடும் விடுதலை உணர்வோடும் வளர்த்தவர்.
பெரியாரை பின்பற்றியவர். பெண் விடுதலை, பெண்கள் சமத்துவத்தையும் மேடைகளில் மட்டும் பேசியவரல்ல, ஏற்றுக் கொண்ட கொள்கையின் படி வாழ வேண்டும் என்கிற லட்சியம் கொண்டவர், வாழ்ந்தும் காட்டியவர்.

அவரது துணைவியார் டாக்டர். மலர்கொடி சுப்பையன் மருத்துவத் துறையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். கணவரும் மனைவியும் தோழர்களாக வாழ வேண்டும் என்று சொன்னவர் அல்ல வாழ்ந்து காட்டியவர்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பலர் மேடையில் பேசுவர். ஆனால், தன் மூன்று மகள்களுக்கும் விடுதலை உணர்வையும் விடுதலை உணர்வு தர கல்விதான் முக்கியம் என்பதையும் கற்றுக் கொடுத்தவர்.

மூத்த மகள் டாக்டர் அன்புக்கனி சுப்பையன் கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

இரண்டாவது மகள் டாக்டர் எழில்கனி சுப்பையன், பெங்களூரில் தற்பொழுது ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். மோல்குலார் பயோலஜி என்ற பிரிவில் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

மூன்றாவது மகள் அனுபிரியா சுப்பையன் பி.ஆர்க் பட்டம் பெற்று பின்னர் அமெரிக்காவில் இன்டீரியர் டிசைனர் பிரிவில் எம்.எஸ் முதுநிலை பட்டம் பெற்றவர். அவரும் அவரது கணவர் Tahaer Zoyab அவர்களும் சென்னை அடையாறு காந்தி நகரில் Triple O Studio என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். Forbes India செய்தி ஊடகம் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் அவர்களை பேட்டி எடுத்து வெளியிடுகிறது.

பல பெரிய மனிதர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் பெரியவர் க.இரா.சுப்பையன் வழிகாட்டியவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர். தன்னை நேசித்தவர்களை மட்டுமல்ல தன்னை விட்டுப் பிரிந்தவர்களையும் வெறுக்காது வாழ்த்திய புனிதர்.

தனது கட்சிக்காரர்களை மட்டுமல்ல மற்றவர்களையும் நேசித்த பண்பாளர். மாற்றாரும் போற்றிய மாண்பாளர். தமிழின உணர்வும் தன்மான எழுச்சியும் அவரது அடையாளம். அரசியல் பரபரப்புக்கு இடையிலும் அமைதியாக வாழ முடியும் என்று வழிகாட்டியவர்.

எல்லோராலும் விரும்பப் பட்ட, யாரையும் வெறுக்காத இதயம் கொண்ட மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய பெரியவர் கா.இரா.சுப்பையன் 17.02.2019 அன்று தமது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

மரணம் புதியதல்ல;
மரணம் அழிவும் அல்ல;
பேரன்புக்கு உரியவர்களின் நேசத்தில்
நிரந்தரமாக,
அவரிலிருந்து விதையாய் விழுந்தவர்களின்
வாழ்வெனும் மரங்களாக இயற்கையின் சுழற்சியில் எப்போதும் இருப்பார்.

 

– அ. முகமது ஜியாவுதீன்
முன்னாள் மாவட்ட நீதிபதி