வலிப்பு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படாது!

டாக்டர் பாலகிருஷ்ணன்

உலக வலிப்பு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.

தலையில் அடிபடுதல், மூளையில் ஏதேனும் பிரச்சினை, பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமி தொற்று, புழுத் தொல்லை, மூளை காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள்.  பரம்பரையாகவும் வலிப்பு வரலாம்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் சார்பில் வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வலிப்பு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் கூறப்பட்டது.

வலிப்பு நோய் குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: வலிப்பு நோய் பிறந்த குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படலாம்.  வலிப்பு ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.

நோயாளி கூறும் அறிகுறிகளை வைத்து அவை வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படும். எம்.ஆர்.ஐ, குறிப்பிட்ட சில ரத்த பரிசோதனைகள், இ.இ.ஜி ஆகிய பரிசோதனைகள் எடுக்கப்படும். வயது, பாலினம் இவற்றைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

வலிப்பு நோயை குணப்படுத்த சிறந்த மருந்துகள் உள்ளது. ஒரு முறை வலிப்பு நோய் வந்துவிட்டால், அதற்கான, சிகிச்சையை வாழ்நாள் முழுவதும் எடுத்துகொள்ள வேண்டுமோ என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிகிச்சை வாழ்நாள் முழுவதும் தேவைப்படாது. நூறில் 80 பேருக்கு மூன்று அல்லது ஐந்து வருடம் மருந்து எடுத்துவிட்டு, பிறகு பரிசோதனை செய்து எந்த பிரச்சினையும் இல்லை என்றால் மருத்துவரின் பரிந்துரையில் சிகிச்சை எடுப்பதை நிறுத்தி விடலாம்.

நூறில் இருபது பேருக்கு மட்டும் தான், சிகிச்சை வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். அவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில், அதன் மூலம் நோயை குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் என்றும் நிறுத்தி விடக்கூடாது. அப்படி மாத்திரை உட்கொள்வதை நிறுத்தினால் மீண்டும் வலிப்பு ஏற்பட்டுவிடும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கக் கூடாது. ஆல்கஹால் போன்றவற்றை எடுக்கக் கூடாது. வலிப்பு வந்த பின் ஆறு மாதங்கள் கண்டிப்பாக வாகனம் ஓட்டக் கூடாது. ஆறு, குளம் போன்ற இடங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். கனரக இயந்திரங்கள் அருகில் நின்று வேலை பார்க்க கூடாது.

ஒருமுறை வலிப்பு வந்து விட்டால் அதை அலட்சியப் படுத்தாமல், அதற்கான சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் அதில் இருந்து எளிதாக மீள முடியும்.