கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறதா?

பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ஓரளவு அமைதி பூங்கா என்று சொல்லும் அளவிற்கு குற்ற சம்பவங்கள் கட்டுக்குள் தான் இருந்து வருகின்றன. அதிலும் கோவை போன்ற தொழில் நகரத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபட நேரமின்றி மக்கள் தொழில் சார்ந்து இயங்குவதால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் குறைவுதான். மக்களின் மனோபாவமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் கொலை போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாக நடைபெற்றதை விட, வேறுவகையில் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக கஞ்சா, போதை மாத்திரை போன்ற பொருட்கள் விற்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஏனென்றால் இதுபோன்ற போதைப் பொருட்களை உட்கொள்ளுபவர்களுக்கு உடல் நலன் கெடுவதோடு அவர்களை தவறான வழியில் மற்றவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பது இன்னும் முக்கியமாக கவனிக்கத்தக்கது.

பல்வேறு பணிச்சுமைகள் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் இளைஞர்களை நேரடியாக கவனிக்க இயலாத நிலை இதுபோன்ற போதைப்பொருள் போன்றவை விற்பவர்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. ஏற்கனவே பார்ட்டி கல்ச்சர் மூலமாக பல இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கஞ்சா, போதை மாத்திரை போன்ற செயல்கள் மேலும் சமூகத்தை சீரழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடவே இந்த வன்முறை கலாச்சாரம், முற்றிலும் துப்பாக்கி கலாச்சாரமாக உருவாகும் பொழுது சமூகம் ஒரு புதிய ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதனை முற்றிலும் தவிர்க்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

இந்த சூழலில் தான் கோவையில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பொதுவாக பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஆங்காங்கே கொலை போன்ற சில குற்ற சம்பவங்கள் நடைபெறுவது இயல்பானது தான். அவை பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சில நேரங்களில் தற்செயலாக தொடங்கி அடிதடி, மோதல், கொலையாக சென்று முடிவதுண்டு.

ஆனால் தற்போது நடைபெற்றுள்ள இரண்டு கொலை சம்பவங்களும் வேறு மாதிரியானவை. ஏற்கனவே முன்விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். பொதுவெளியில் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இது திட்டமிட்ட சம்பவமாகவே தெரிகிறது. ஒரு சம்பவத்தில் துப்பாக்கி வெடித்ததாகவும் கூறப்படுகிறது. கோவை நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்ற இந்த குற்ற சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதே நேரம் காவல்துறையின் பணியையும், பொறுப்பையும் கடுமையாக்கி உள்ளது.

ஒரு குற்ற சம்பவத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே நடைபெற்ற குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் குறி வைத்து தாக்கப்பட்டு இருக்கிறார்.  ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.  இன்னொரு சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே தாக்குதல் நடைபெற்று கொலை நடந்து முடிந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தேடப்பட்ட குற்றவாளிகளை அழைத்து வரும் வழியில் போலீஸ் காவல் துறை மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக காவல்துறை துப்பாக்கி சூடும் நடைபெற்றிருக்கிறது. இவை எல்லாம் ஒரு வகையான அமைதியின்மையும், சட்டம் ஒழுங்கு சிக்கலையும் நகரில் ஏற்படுத்தி உள்ளன.

எனவே உடனடியாக விரைந்து செயலாற்றி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். குறிப்பாக காவல்துறை அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதி நிலவச் செய்ய வேண்டும். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பழிக்கு பழி என்று குற்றங்கள் வளராதவாறு வன்முறையின் வேர்களை கண்டறிந்து களைய வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால், கூடா நட்பால், தேவையற்ற பழக்கங்களால் திசை மாறும் இளைஞர்கள் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும். அப்பணியில் காவல் துறையோடு சேர்ந்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் இதில் கைகோர்க்க வேண்டும். போலீஸ்  பொதுமக்கள் குழு போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட வேண்டும்.