மின்சாரம், இணையம் இல்லாமல் அமைதியாக வாழும் மக்கள்! – யார் இவர்கள்?

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில், மலை மற்றும் காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது கூர்ம கிராமம். விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராம் நவீன வாழ்க்கை முறைகளை ஒதுக்கி தள்ளியுள்ளது. இந்த கிராமத்தில் இணைய வசதி இல்லை. மொபைல் ஃபோன்களோ அல்லது தொலைக்காட்சியோ கூட இல்லை. அவ்வளவு ஏன் அங்கு மின்சாரமே கிடையாது.

கூர்ம கிராமத்தில் 50 மண் வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் இரும்பு மற்றும் சிமெண்டிற்கு பதிலாக மண்ணையும் சுண்ணாம்பையும் கொண்டு வீடு கட்டுகிறார்கள். சிலர் தங்களது குடும்பங்களுடன் இருக்கிறார்கள். சிலர் தனியாகவும் வசிக்கின்றனர்.

கையால் அரைத்த அரிசி, உடுக்க தேவையான துணிகளை தறியில் நெய்து கொள்ளுதல் என்று தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கிறது. அருகிலுள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் இருந்தாலும், இங்கு விளக்குகளை மட்டுமே மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த 60 ஏக்கர் கிராமத்தில் சமூக நலனுக்காக ஒரு லேண்ட்லைன் போன் மட்டுமே உள்ளது.

கிராமத்தின் வாழ்வாதாரம், நிலம் மற்றும் மாடுகளை நம்பியே உள்ளது. வயல்வெளிகளில் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாங்களாகவே பயிரிட்டு, தேவையான பொருட்களை அருகில் உள்ள கிராம விவசாயிகளிடம் பண்டமாற்று செய்து கொள்கிறார்கள். கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபடுகின்றனர்.

இங்கு அடுப்பிலேயே உணவு சமைக்கப்படுகிறது. இதற்கு மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கான கிணற்றிலிருந்து நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இந்து மத கடவுளான கிருஷ்ணரின் கொள்கை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்வதாக தெரிவிக்கின்றனர். பாரம்பரியம் மற்றும் ஆன்மிகம் என இரண்டும் கலந்த வாழ்க்கை முறையை தாங்கள் தேர்தெடுத்துள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.

“மின்சாரம் அல்லது மொபைல் போன்கள் இல்லாமல் இயற்கைக்கு அருகாமையில் வாழ்கிறோம். இவை அனைத்துமே ஒரு அமைதியான வாழ்க்கைக்கு தேவையற்றவை. வெளியில் உள்ளவர்களிடம் அனைத்துவித வசதிகளும் இருக்கும். போன், மால் வசதி, இணையம் என அனைத்தும் இருக்கும். ஆனால் அங்கு அமைதியை தேடிக் கொண்டிருப்பார்கள்” என கூர்ம கிராமவாசி நிதானி மைதாஸ் தெரிவிக்கிறார்.

“ஒன்று எளிமையாக வாழ்வது, இன்னொன்று உயர்ந்த எண்ணங்களை கொண்டிருப்பது. எளிமையாக வாழ்வது புதிதல்ல. சாஸ்திரங்களின் படி, நமது முன்னோர்கள் வாழ்ந்த முறைதான் அது. நவீன வாழ்க்கை முறையால் உருவான பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வாக இந்த எளிமையான வாழ்க்கை முறை உள்ளது.

இரண்டாவது ஆன்மிக சிந்தனைகளையோ அல்லது உயர்ந்த எண்ணங்களையோ கொண்டிருப்பது. பக்தியின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதே இதன் கொள்கை” என்கிறார் கூர்ம கிராமத்தைச் சேர்ந்த ட்ரிபாங்கா அனந்ததாஸ்.

திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் வயதானவர்கள் மற்றும் அனைத்து விதமான மக்களும் இந்த கூர்ம கிராமத்தில் வசிக்கின்றனர். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து வசிக்கலாம். இங்கு தங்குவதற்கு இங்குள்ள கிராம வாசிகளே ஏற்பாடுகளை செய்கின்றனர். இங்கு அனைத்தும் இலவசம். இவர்கள் நன்கொடை பெறுகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பண்டமாற்று முறையை பின்பற்றுகின்றனர்.

பள்ளிகளுக்கு பதிலாக குருகுலங்கள் வழியாக வேத பாணியில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. இந்தியா போஸ்ட் இங்கிலீஸ் வலைதளத்தில் குருகுலத்தைச் சேர்ந்த சித்து சித்தாந்த் கூறுகையில்: ஒழுக்கம் மற்றும் உயர்ந்த எண்ணம் கொண்டு இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகாலை 3:30 மணிக்கு தூங்கி எழுவோம். நான்கரை மணி வரை மங்கள ஆரத்தி செய்து மந்திரம் ஓதுவார்கள். குருபூஜை ஒரு மணி நேரம் நடைபெறும். அதன் பிறகு அனைவரும் புத்தகம் படிக்க அமர்ந்து விடுவார்கள். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் எனக் கூறுகிறார்.

குருகுலத்தில் படிப்பவர்களுக்கு கணிதம், அறிவியல், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கலை மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது. சில சமயங்களில் குழந்தைகள் மகாபாரதம், அதன் வரலாற்று கதைகள் மற்றும் காட்சிகளில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். கற்றலை தத்துவார்த்த அறிவைக் குவிப்பதாகக் கருதாமல், சுய உணர்தலுக்கான வழிமுறையாகப் பார்க்கிறார்கள். எனவே, உடல் செயல்பாடுகளும் தரப்படுகிறது.

இந்த கிராமத்திற்கு சுற்றுலா வந்த ஹரி என்பவர் பிபிசி.,யிடம் பகிர்ந்து கொண்டது: “இங்கு வந்த பிறகு பணம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கற்றுக்கொண்டேன். நம்மிடம் எல்லா வசதிகள் இருந்தும் நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. தொழில்நுட்ப சாதனங்கள் மீது விருப்பம் கொண்டவர்களைக் காட்டிலும், இங்குள்ளவர்கள் அதிகம் தெரிந்து வைத்துள்ளனர். இங்கு மின்சாரம் மற்றும் இணைய வசதி இல்லாமல் அமைதியாக வாழ்கின்றனர்” என தெரிவிக்கிறார்.

பணம் வேண்டுமானால் மீண்டும் வாழ்க்கையின் சலசலப்புக்குப் பழக வேண்டும். அதனால்தான் நாங்கள் அந்த வசதிகளில் இருந்து விலகியுள்ளோம். இந்த அணுகுமுறை எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என கிராம மக்கள் கூறுகின்றனர்.

கூர்ம கிராம வாசிகள் வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அவர்கள் பார்வையாளர்களிடமிருந்து தொடர்ந்து செய்திகளைப் பெறுகிறார்கள். இந்த கிராமம் பற்றி அறிந்து, இங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.