மாறும் காலநிலை: நோய் பரவும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030 ஆம் ஆண்டு முதல் 160 லிருந்து 200 மில்லியன் மக்கள், கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் குறைவினால் 34 மில்லியன் மக்கள் வேலை இழப்பை சந்திப்பார்கள் என உலக வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பூமி வெப்பமடையும்போது, விலங்குகள் மற்றும் நோயைச் சுமக்கும் கொசுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உலகின் பகுதிகளுக்குச் செல்வதால் தொற்றுநோய்கள் அதிகமாகி வருகின்றன. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக மனிதகுலம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலகம் முழுவதும் வரும் காலங்களில் தொற்றுநோய்களின் தாக்கம் 58 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என ஓா் ஆய்வின் முடிவு கூறுகிறது. மனிதா்களை தாக்கும் 375 நோய்களில் 218 க்கும் அதிகமான நோய்கள் காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் என கண்டறியப்பட்டுள்ளது.

2030 முதல் 2050 வரையான காலகட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு, வெப்ப அயா்ச்சி காரணமாக ஆண்டொன்றுக்கு சுமாா் 2,50,000 கூடுதல் இறப்புகளை பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

காலநிலை ஏற்படுத்தும் வெப்பமயமாதல் அல்லது மழைப்பொழிவு மாற்றங்கள் கொசு உற்பத்தியினை தீா்மானிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுத்திய புவியியல் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை.

தற்போதைய கார்பன் உமிழ்வு விகிதத்தின்படி, இன்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் காலநிலை மாற்றத்தால் தனது வாழ்நாள் முழுவதும் உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுமென்று புதிய அறிக்கை கூறுகிறது.

பலத்த மழை, சூறாவளி, வானிலையில் திடீர் மாற்றங்கள் அல்லது அதிக வெப்பம் ஏற்படும் போது, ​​வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் ஏற்படும் சில நோய்கள் பரவுவது எளிதாகிறது. இந்த விளைவுகள் அனைத்தும் புவி வெப்பமடைதலிலிருந்து பெறப்பட்டவை. காலநிலை மாற்றம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவது மட்டுமல்லாமல், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் மாற்றுகிறது. பாதிக்கும் மேற்பட்ட தொற்றுநோய்களை காலநிலை மாற்றம் மேலும் மோசமாக்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்தும் வரும் புதிய தொற்றுகள், நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் இடம் பெயர்வு எதிர்காலத்திற்க்கான ஆபத்தை அதிகரிக்கும் இரண்டு காரணிகளாக உள்ளன. அதில் காலநிலை மாற்றத்தையும் சேர்த்துக் கொண்டால் உலக சுகாதார பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு கலவையாக இருக்கும் என கூறப்படுகிறது.  இதுபற்றி பிபிசி தமிழ் ஒரு காணொளி பதிவில் விளக்கியுள்ளதை காண்போம்.

வெப்பமான பகுதிகள் பாக்டீரியாக்களுக்கு உகந்தவை:

வானிலை வெப்பம் அடையும் போது சில நோய்கள் அதிகம் பரவும். உதாரணத்திற்கு காலராவை எடுத்துக் கொள்ளலாம். இது மிகவும் ஆபத்தான நோய். இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் இருக்கும் பாசிகளில் காணப்படும். நீர் வெப்பம் அடையும் போது, பாசிகள் பெருகும் என்பதால் அப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வெள்ளம் போன்ற காலநிலை சார்ந்த பேரழிவுகள் நீரினால் பரவும் நோய்களை அதிகரிக்கின்றன. மேலும், அவை பூச்சிகளையும் ஈர்க்கின்றன.

பரவும் கொசுக்கள்

நோய் பரப்பும் கொசுக்கள் வெப்பமான சூழலில் பெருக்கம் அடையும். ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன், அமெரிக்காவின் மலை பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்குவின் படையெடுப்பை காணமுடிகிறது. அவை முன்பு இல்லை. ஐரோப்பாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு டெங்குவின் உள்ளூர் பரவலை தற்போது காணமுடிகிறது. உலகின் கார்பன் உமிழ்வு அளவு குறையவில்லை என்றால் நோய்பரப்பும் கொசுக்களின் பரவல் அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் கணித்துள்ளன.

வாழ்விட மாற்றங்கள்:

பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது, விலங்குகள் தங்களுக்கு ஏற்ற இடங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். இது விலங்குகளை சார்ந்து இருந்த வைரஸ்கள் மனித சமூகத்திற்குள் நுழைய வழிவகுக்கும். இதன்மூலம் நோய்தொற்றுகள் அல்லது பெரும் தொற்றுகள் ஏற்படும். கொரோனா பரவலில் இதுதான் நடந்தது.

இதை எப்படி தடுக்கலாம்?

பில்லியன் கணக்கான வைரஸ்கள் உலகத்தில் உள்ளன. அவை அனைத்தும் ஆபத்தானவை இல்லை. மனித சமூகத்திற்கு சிறந்த தடுப்பு மருந்துகளும், எதிர்ப்பு மருந்துகளும் தேவை. இதுமாதிரியான நோய்களை எதிர்கொள்ள நம்மிடம் மருந்து இருக்கவேண்டும். அந்த மருந்து, உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.