கோவில் யானை குளிப்பதற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி

கோவை பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார்.

பட்டீஸ்வரர் கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை கடந்த 1996-ம் ஆண்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு தற்போது 32 வயதாகிறது. கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் கூட்டமும் உண்டு.

இந்நிலையில் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோவிலின் பின்பகுதியில் 5.5 ஏக்கர் நிலத்தில் யானை குளியல் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 4 அடி உயரத்திற்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த யானை குளியல் தொட்டி பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடந்தது. யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டதை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.