
கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் “ஏவியேஷன்” மற்றும் “ரோபோடிக்ஸ்” கிளப் மாணவர்கள், சமீபத்தில் சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ‘சாஸ்திரா 23’ என்ற தொழில் நுட்ப போட்டிகளில் பங்கு பெற்றனர்.
அதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒரு போட்டி கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட “ரோபோ ஓசன்” என்ற போட்டியில் கே.பி.ஆர். கல்லூரியின் ஐந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை படைத்தது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள சைதன்ய பாரதி கல்லூரி ‘ரோபோ வான்சா’ என்ற தேசிய அளவிலான போட்டியை நடத்தியது. அதில் ‘ஓவர் கிராப்ட்’ என்ற போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி அணிகள் பங்கு பெற்று முதல் இரண்டு இடங்களையும் பெற்று சாதனை படைத்தது.
இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி கல்லூரி முதல்வர் அகிலா கூறும் போது, கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக இந்த வெற்றி உள்ளது.
மேலும் ஐ.ஐ.டி. போன்ற நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறந்த அணிகள் பங்குபெறும். இப்போட்டியில் கே.பி.ஆர். கல்லூரியின் அணி வெற்றி பெற்றது கல்லூரி மாணவர்களின் திறமையையும், கல்லூரியின் தரத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது என்றார்.