ஆன்மிகப் பணிக்கு உதவும் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களின் ட்ரோன்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ட்ரோன் பைலட் பயிற்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் ட்ரோன் பைலட் அங்கீகாரம் பெற்று ஆளில்லா விமான தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இக்கல்லூரியின் மாணவர்கள் பலர் மத்திய அரசின் ட்ரோன் பைலட் அங்கீகாரம் பெற்று படித்து கொண்டிருக்கும் போது, சிறந்த நிறுவனங்களில் முதன்மையான செயல்திட்டங்களுக்கு பகுதி நேரமாக பணியாற்றி பொருளீட்டி வருகின்றனர்.

மேலும், சமூக சிந்தனை அக்கறையுடன் இந்த ட்ரோன் தொழில்நுட்பமானது கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் இந்துஸ்தான் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாக சாய்பாபா கோவிலின் அஷ்ட பந்தன குடமுழுக்கு விழாவில் கலசத்திற்கு மலர் தூவுதல், திரண்டு இருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக துடியலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பள்ளி கொண்ட அரங்கநாதர் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவிலும் ட்ரோன் மூலம் மலர் தூவுதல், தீர்த்தம் தெளித்தல் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளுக்கான ட்ரோன்களை மாணவர்களே வடிவமைத்து தேவைக்கேற்ற தொழில்நுட்ப வசதிகளை இணைத்து செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான பணிகளை கல்லூரியில் செயல்பட்டு வரும் ஆளில்லா விமான பயிற்சி குழு மற்றும் மத்திய அரசின் ட்ரோன் பைலட் சான்றிதழ் பெற்ற மாணவன் வசுபதி மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வ மருதூர் ஸ்ரீ செல்வ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் இதுபோன்ற பணியினை மெகாட்ரானிக்ஸ் துறை மாணவர் மகா கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.

மேலும் கல்லூரி நிர்வாகம் விவசாயத்திற்கு பயன்படும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அக்ரி ட்ரோன்களை மாணவர்கள் மூலமாக அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு அதனை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாக அரங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயல் அறங்காவலர் பிரியா, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், முதல்வர் ஜெயா, விமானவியல் துறையின் தலைவர் கோபிநாதன், ஆளில்லா விமான பயிற்சி குழுவின் ஆசிரியர் சரவணகுமார் மாணவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.