கிருஷ்ணம்மாள் கல்லூரியில் மகளிர் கூடைப்பந்து போட்டி

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூடை பந்து போட்டியில் மாநில முழுவதும் இருந்து பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

‘கே.சி. டபிள்யூ. டிராபி – 2023’ கோப்பைக்கான இந்தப் போட்டியை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

விழாவில் கல்லூரி செயலாளர் டாக்டர் யசோதா தேவி, முதல்வர் மீனா, முதன்மை உடல்கல்வி அதிகாரி சுகந்தா சம்பத்குமார், உடல்கல்வி அதிகாரி ஜெயசித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து உடல்கல்வி அதிகாரிகள் சுகந்தா சம்பத்குமார், ஜெயசித்ரா ஆகியோர் கூறியதாவது:
தமிழ்நாடு மாநில அளவில் உள்ள மிகச்சிறந்த ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி லீக் முறைப்படி நடத்தப்பட உள்ளது.

ஆறு அணியினரும் மற்ற அணியினருடன் விளையாட வேண்டும். இறுதியில் எந்த அணி அதிக புள்ளிகள் எடுத்துள்ளதோ அதன் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படும். வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக கோப்பை, சான்றிதழ், பதக்கம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கம் 15,000 ரூபாய் ரொக்க பரிசும், மூன்றாம் இடம் வெற்றி பெறும் அணியினருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கம், பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணியினருக்கும் ரொக்க பரிசாக ஐந்தாயிரம் தரப்பட உள்ளது.

இதை தவிர இந்த மொத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இரு மாணவிகளை தேர்ந்தெடுத்து கோப்பை மற்றும் தலா 2500 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.