பட்ஜெட்: பாஸா? பெயிலா?

இந்த ஆண்டிற்கான, 2023 – 24 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள பாரதிய ஜனதா அரசு தற்போதைய பதவிக்காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்குவதால், வரப்போவது இடைக்கால பட்ஜெட் ஆகத்தான் இருக்கும். எனவே இந்த முழு பட்ஜெட் என்பது பொது மக்களுக்கு தொல்லை தராத பட்ஜெட் ஆகத்தான் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். கிட்டத்தட்ட அதே போலத்தான் பெரிய சிக்கல்கள் எதுவும் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சில முக்கியமான துறைகளுக்கு மத்திய அரசாங்கம் அதிகமாக தொகை ஒதுக்கீடு செய்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும். குறிப்பாக ரயில்வே துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 73 வந்தே பாரத் ரயில்கள் என்றால் அடுத்து 200 ரயில்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சேவை, மறுபுறம் வருமானம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று பயன் தரும் முதலீடாக இதனை கொள்ளலாம். அதைப் போலவே ராணுவத்திற்கு 5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லையில் எப்போதும் சிக்கல் உள்ள நாடுகளில் ஒன்றான இந்திய போன்ற நாட்டுக்கு இது மிகவும் அவசியமாகும்.

அதேபோல சுமார் 20,000 கோடியில் தேசிய ஹைட்ரஜன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக பொதுமக்களுக்கு தொடர்பானதாக தற்போது பயன் தராவிட்டாலும் எதிர்காலத்தில் பெரும் முக்கியத்துவம் பெறுவதாக இந்த தொழில்நுட்பம் அமையும் என்று கூறப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை பட்ஜெட் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

ஆனால் நாட்டின் முக்கிய முதுகெலும்பான விவசாயத்தையோ, வேலை வாய்ப்பு, சிறுகுறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை குறித்த பெரிய சிறப்பு அறிவிப்புகள் எதுவும் தென்படவில்லை என்று பட்ஜெட்டை கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள். வேளாண் கடன் வழங்க சுமார் 20 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்திருந்தாலும் நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதைப்போலவே விவசாயிகளின் நலனுக்கு 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறைவு என்று ஒரு வாதம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வெகுகாலமாக பேசப்பட்டு வரும் விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயம், சட்டபூர்வமாக கொள்முதல் செய்தல் ஆகியவை குறித்து பட்ஜெட் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

வருமான வரி விதிப்பு என்பது இந்த முறை கண்டிப்பாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தப் போகிறது என்று தோன்றுகிறது. இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விதிக்கும் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வருமானவரி முறைக்கு கட்டாயப்படுத்த மாட்டோம் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். என்றாலும் மூத்த ஆடிட்டர்கள் சிலர் கூறும் பொழுது வருமான வரி தாக்கல் என்பது புதிய நடைமுறையா, பழைய நடைமுறையா என்பதை கண்டிப்பாக தேர்வு செய்து தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தானாகவே புதிய வருமான வரி நடைமுறையானது நமக்கு கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படலாம் என்று கூறுகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பட்ஜெட் ஆனது இனிப்பும், கசப்பும் கலந்தது போல உள்ளதாக கருத்து நிலவுகிறது. தனிப்பட்ட முறையில் பாதுகாப்புத்துறை, ரயில்வே போன்ற துறைகளில் அதிக முதலீடு செய்ய உள்ளதால் ஆர்டர்கள் பெருக வாய்ப்பு உண்டு. ஆனால் அதே நேரம் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த சாதகமான எந்த ஒரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கடன் உதவிக்கான வட்டித்தொகை தள்ளுபடி போன்ற விஷயங்கள் இங்கே குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் எதிர்பார்த்த சலுகைகளும் இல்லை, பெரிய அளவில் பாதகமான அம்சங்களும் இல்லை என்பதுதான் பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாகும். சாதாரண நடுத்தர வர்க்க இந்தியனை பொறுத்தவரை இது வழக்கமான மற்றும் ஒரு நாளே!