அதிரடி திருப்பங்களை தரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல அதிரடி திருப்பங்களை அளித்து வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன்  ஈவெரா மறைவால் காலியான இத்தொகுதிக்கு மிகக் குறுகிய காலக்கட்டத்தில் அதாவது இரண்டு வாரத்தில் இடைத்தேர்தல் அறிவித்து அதிரடியை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம். இடைத்தேர்தல் என்பதால் ஆளும் கட்சியான திமுக தான் போட்டியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கணக்குப் போட்டிருந்த நிலையில், இத்தொகுதி காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எப்போதுமே வேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாளில் வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ் முன்கூட்டியே வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து, அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து களத்தில் முந்திச்செல்லும் அதிமுக, இம்முறை பின்தங்கிவிட்டது.  காரணம், அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது.

ஒருவழியாக இருவருமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும், பாஜக யாரை ஆதரிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது.  இந்நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் தரப்பின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், தங்களது ஆவணபடி அதிமுக தலைமையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே உள்ளன என்றும், அதிமுக விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் அறிவித்தது. இது தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இடைக்கால தீர்ப்பு மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சேர்த்துக்கொண்டு மீண்டும் பொதுக்குழுவை கூட்டி அதிமுக சார்பில் பொதுவேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இது ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலுக்கு மட்டுமே இந்த மாற்று ஏற்பாடு என்றும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் வெளியிடும் உத்தரவின்பேரில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை அங்கீகாரம் வழங்கும் ஏ, பி படிவங்களில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் திடீர் திருப்பம் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, ஓபிஎஸ் அணியின் வேட்பாளரான செந்தில் முருகன் தனது வேட்புமனுவை நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே தாக்கல் செய்துவிட்டார். மேலும், பாஜவை பொறுத்தவரை ஒன்றுபட்ட அதிமுக தான் தங்களது விருப்பம் என்றும்,  இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுவேட்பாளராக ஒருவரை அறிவிக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை இருவரையும் நேரில் சந்தித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ., தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பாஜகவின் முடிவை பிப்.7 இல் அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்தொற்றுமை ஏற்படாவிடில் பாஜக பொதுவேட்பாளரை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் வேட்புமனு பரிசீலனை நாள் பிப்.10 ஆம் தேதி வரை இடைத்தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

பொதுக்குழு கூட்டுவது சாத்தியமா?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் திரும்பப்பெறும் வரை பல திருப்பங்கள் காத்திருக்கிறது என்றே தெரிகிறது. உச்சநீதிமன்றம் கூட்டத்தில் இடைக்கால தீர்ப்பு  நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஒன்றா என்பது கேள்விக்குறி தான்.

ஏ,பி படிவங்களில் யார் கையெழுத்து போடுவது என்பது உச்ச நீதிமன்றத்தில் இன்னும் தெளிவாகவில்லை. இன்னும் மூன்று நாள்களுக்குள் பொதுக் குழு கூட்ட முடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறி தான். தபால் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை அறிந்தால் கூட அந்த தபால் வகையில் முறைப்படியாக பதிவு செய்யப்பட்டதா என்பதில் இன்னொரு கேள்விகுறி எழும்.

மேலும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் பெறுவதற்கான ஏ,பி படிவங்களில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். இவ்வாறு பல கேள்விக்குறிகளுக்கு மத்தியிலேயே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்றார் ரிஷி.