சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு – வேளாண்மை பல்கலை கணிப்பு

சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயம் பயிரிடப்படுவதிலும், வியாபாரம் செய்வதிலும் தமிழகத்திற்கு கர்நாடகா முக்கிய போட்டியாளராக திகழ்கிறது.

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்த் துறையின் அறிக்கையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் 0.51 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.80 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மொத்த வெங்காய பரப்பளவில் 80 சதவீதத்திற்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர்.

தற்போது, கோயம்புத்துர் சந்தைக்கு ராசிபுரம், துறையூர், சத்தியமங்கலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. வர்த்தக மூலங்களின்படி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெய்த பருவமழை காரணமாக பயிர் சேதமடைந்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டு சந்தைக்கு சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து காணப்பட்டது.

நடப்பாண்டின் பயிர் அறுவடை மற்றும் கர்நாடக வரத்து காரணமாக பிப்ரவரி-மார்ச் 2023-இல் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை பிப்ரவரி முதல் மார்ச் 2023 வரை கிலோவிற்கு ரூ.35 முதல் ரூ.40 வரை இருக்கும் என கணித்துள்ளது.

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.