மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது – கோவை இந்திய தொழில் வர்ததக சபை

நாடாளுமன்றத்தில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது என கோவை இந்திய தொழில் வர்ததக சபை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டான 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வளங்களை பயன்படுத்துதல், வேளான் வளர்ச்சி ஆகியவை இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவை இந்திய தொழில் வர்ததக சபை நிர்வாகிகள் பட்ஜெட் குறித்தான தங்களது கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். அவர்கள் கூறுகையில்: பல சிறப்பான விசயங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு உதவுவதாக கூறியுள்ளனர். மேலும் தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்த 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைப்பதாகவும், மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் வருமான வரியில், புதிய வரி விகிதங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இளைஞர்களுக்காக நாடு முழுவதும் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறியவை கோவை இந்திய தொழில் வர்ததக சபை குறிப்பிட்டு பாராட்டியவை மற்றும் இந்த மத்திய பட்ஜெட்டிற்கு 70 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை இந்திய தொழில் வர்ததக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு, செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, பொருளாளர் வைஷ்ணவி மற்றும் வர்ததக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.