வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு முகவரி அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.
அவர் தனது துவக்கவுரையில், உதவித்தொகை என்பது உயர்கல்வியை தொடர்ந்து படித்து பயன்பெற பொருளாதாரத்தில் பின் தங்கிய குறிப்பாக கொரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

கல்லூரியில் பயிலும் நான்கு ஆண்டுகளுக்கும் கல்வி மற்றும் விடுதி கட்டணம் முழுவதுமாக தேர்வு செய்ய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும். இது மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், உயர் கல்வி மூலம் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் வழிவகுக்கிறது என்றார்.

இந்த கல்வி உதவித்தொகையினை ராசி சீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
ராஜேந்திரன் ராமசாமி வழங்கினார். கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள், பின்னாளில் உயர் பதவிகளில் சேர்ந்து, உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி நல்ல வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையிலுள்ள முகவரி அறக்கட்டளையின் நிறுவனர் ரமேஷ் கூறுகையில்: முகவரி அறக்கட்டளை என்பது ஒரு குடும்பம் போல 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 650 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பல்வேறு ஆதரவாளர்கள் மூலம் வழங்குகிறது. கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் பலர் இன்று உயர்ந்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளைச் சேர்ந்த பதினைந்து மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.