ஐடி துறை:  ஆட்குறைப்பும், அதிர்ச்சி அலைகளும்

உலகமயமாக்கலுக்கு பிறகு வெகுவேகமாக வளர்ந்த துறைகளில் ஒன்றாக ஐடி எனும் தகவல் தொழில்நுட்பத் துறையை கூறலாம். குறிப்பாக அத்துறை அளித்த வேலை வாய்ப்புகளும், வருவாயும், ஊதியமும் வேறு எந்த துறையும் தரவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு சாதாரண குடும்பத் தலைவன் 10 ஆண்டுகளில் சம்பாதித்த வருமானத்தை, அந்தத் துறையில் பணியாற்றும் இளைஞன் ஒரே ஆண்டில் சம்பாதிக்கும் நிலை சாத்தியமானது.

ஐடி துறையின் வணிக மையமாக அமெரிக்க நாடு திகழ்கிறது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், டெஸ்லா, ட்விட்டர் என்று மாபெரும் நிறுவனங்கள் தொடங்கி இன்ன பிற சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உலக அளவில் தொழில்நுட்ப இயலிலும் வேலைவாய்ப்புகளிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தன.

இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் அடங்கும். இதில் பெரிய விசித்திரம் என்னவென்றால், புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை கண்டறிந்த மேற்குலக நாடுகளுக்கு இணையாக இந்தியா, சீனா போன்ற பாரம்பரிய நாடுகளின் இளைஞர்களும் இந்த துறையில் நுழைந்தது தான். மொத்த ஐடி துறை பணியாளர்களின் எண்ணிக்கையில் இவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததோடு, உயர் பதவிகளிலும் முக்கிய பொறுப்புகளிலும் அமர்ந்ததை கண்கூடாக காண முடிகிறது.  கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா ஆகியோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்நிலையில் தான் உலக அளவிலான ஆட்குறைப்பு என்பது இந்த துறையில் தொடங்கி இருக்கிறது. ஐடி துறையின் மையமாக திகழும் அமெரிக்காவில் தான் ஆட்குறைப்பும், பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதும் தொடங்கி இருக்கிறது. இது உலக அளவில் பல விதங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தற்பொழுது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், கடந்த ஆண்டுகளில் பரவிய ஆட்கொல்லி நோயான கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளும் இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

உலக அளவிலான ஆட்குறைப்பு என்பது ஐடி துறையில் தொடங்கி இருக்கிறது. இத்துறையின் மையமாக திகழும் அமெரிக்காவில் தான் ஆட்குறைப்பும், பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதும் தொடங்கி இருக்கிறது. இது உலக அளவில் பல விதங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த செய்திகள் இத்துறையில் பணியாற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பரில் தொடங்கிய ஆட்குறைப்பை நடைமுறையில் பார்த்தால், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் என்று எல்லா நிறுவனமும் எவ்வித தயக்கமும் இன்றி ஆட்களை பணி நீக்கம் செய்து வருகிறார்கள். இதனால் மூன்று விதமான சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

முதலாவது முக்கியமான சிக்கல் என்னவென்றால் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரில், மிகப் பெரும்பாலானவர்கள் ஹெச் ஒன் பி விசா மற்றும் எல் ஒன் விசா பெற்று பணிபுரிபவர்கள். இந்த விசா பெற்று பணிபுரிபவர்கள் அந்தப் பணியில் இல்லாத பொழுது எண்ணி 60 நாட்களுக்குள் இன்னொரு பணியில் தேடி இணைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அமெரிக்க நாட்டின் விதிகளின்படி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இது ஐடி துறையில் பணிபுரியும் பலரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாவது சிக்கல் என்னவென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளுகின்ற பொருளாதார, சமூக நெருக்கடிகள் ஆகும். கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என்று இதுவரை இருந்தவர்கள் இன்று தரையில் எடுத்து வீசப்பட்ட மீனாக துடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடவே அவர்களின் குடும்பத்தினரின் நிலையும் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் டாலர் செலுத்தி கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது தந்தையுடைய பணி பறிபோனவுடன் அடுத்து என்ன செய்வது என்று தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் அல்லது மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு வாங்கியுள்ள சொத்துக்கள் மற்றும் கடன் வாங்கி ஏற்படுத்திக் கொண்ட உடைமைகள், வசதிகள் குறித்தான கேள்வி எழுந்துள்ளது. எல்லாவற்றையும் என்ன செய்வது, யாரிடம் விடுவது அல்லது விற்பது, எவ்வாறு முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவதாக இந்தத் துறையின் வருவாய் மூலமாக வளர்ந்து வரும் மற்ற துறைகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் எப்பொழுது சீராகும் என்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் அந்தந்த குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார பின்னடைவுகளும், இதில் குறிப்பிட வேண்டியதாக உள்ளது.

இந்நிலையில் ஒரு அறிவார்ந்த சமூகமாக இந்த துறை சார்ந்த இந்தியர்கள் தங்களுக்குள் பலவிதமான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். என்றாலும் அதனை விட வேகமாக ஆட்குறைப்பு என்பது நடைபெற்று வருகிறது. உலக அளவில் இந்திய வெளி விவகாரத் துறையும் இந்தியாவும் நற்பெயரோடுதான் உள்ளன. அந்த வகையில் இந்த புதிய சிக்கல் குறித்தும் மத்திய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும்.